(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் நிர்மாணித்த 5 பிரதான அபிவிருத்திகளை விற்றால் கூட அரச முறை கடன்களை செலுத்த முடியாது.

அரசாங்கத்தின் முற்போற்கான நிதி முகாமைத்துவத்தினால் இலங்கை எதிர்காலத்தில் பின்தங்கிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்க நேரிடும்.

Articles Tagged Under: சம்பிக்க ரணவக்க | Virakesari.lk

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என அரசாங்கம் உள்ளுர் மட்டத்தில் குறிப்பிடலாம் ஆனால் சர்வதேசத்திடம் குறிப்பிட முடியாது.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சர்வதேச மட்டத்தில் கிடைக்கப் பெறவிருந்த பல நிதி நிவாரணங்கள் இல்லாமல் போயுள்ளன.

ஒரு குடும்பத்தால் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற 43 படையணி அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

எதிர்காலத்தில் நாடு எதிர்க் கொள்ள நேரிடும் நிதி நிலவரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 2014 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளேன்.

தன்னால் நிர்மாணித்த அபிவிருத்திகளை பிற நாட்டவர்களுக்கு விற்றால் அரசமுறை கடன்களை செலுத்தி விடலாம் என பெருமையாக குறிப்பிட்டார். அவர் ஆட்சி காலத்தில் உருவாக்கிய 5 அபிவிருத்தி நிர்மாணிப்புக்களை விற்றால் கூட  வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத தன்மை காணப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றால் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களையும்,மத்தளை விமானநிலையத்தை விற்றால் 0.3 3 பில்லியன் டொலர்களையும்,கொட்டாவ-அம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையை விற்றால் 2.2  பில்லியன் டொலர்களையும், புத்தளம் மின்நிலையத்தை விற்றால் 1.2 பில்லியன் டொலர்களையும் , துறைமுக நகரத்தையும் அதனை அண்டிய பகுதியை விற்றால் 1.4 பில்லியன் டொலர்களையும் அத்துடன் பெருமளவிலான 5 அபிவிருத்திகள் ஊடாக 6.4 பில்லியன் டொலர்களையும் பெற முடியும் என பெருமைப்பட்டுக் கொண்டார்.

இவ்வருடத்தில் மாத்திரம் 6.9 பில்லியன் அரசமுறை கடன் செலுத்தப்படவேண்டும்.இன்று எமது முன்னிலையில் இரண்டு பிரதான சவால்கள் உள்ளன.ஒன்று பொருளாதார நெருக்கடி,அரச வருமானம்,மற்றும் அரச செலவினம் ஆகியவற்றுக்கிடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.2021ஆம் ஆண்டுக்கான அரச செலவினம் 4948 பில்லியனாகும். இதற்காக 2987 பில்லியன் டொலர் கடன் பெற குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் முழுமையான செலவு 1994 பில்லியன் என  சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் வீதி அபிவிருத்தி, அனைத்து பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக33000 வீடுகள் நிர்மாணம் பசில் ராஜபக்ஷவின் 'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்துக்கு செயற்திட்டத்துக்கு 1070 பில்லியன் என வரவு - செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. இறுதியில் குறிப்பிடப்பட்ட இரு விடயங்களும் நடைமுறைக்கு சாத்தியமற்றது..

2020ம் ஆண்டுக்கான அரச வருவாயை பகிரங்கப்படுத்துமாறு நிதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினேன் .2020ம் ஆண்டுக்கான அரச வருமானம்,வரி வருமானம் 1040 பில்லியன் இதர விடயங்களை கருத்திற்கொண்டாலும் 2020ம் ஆண்டுக்கான அரவ வருமானம் 1300 பில்லியனை கூட அடையவில்லை.2021ஆம் ஆண்டுக்கான அரச வருமானம் 1994 பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனெனில் 2019 டிசெம்பர் மாதம் முதலாம் திகதி வரை  அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரி குறைப்பினால்  அரச வருமான பெறுகை வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாரான நிலையில் இவ்வருடம் 1994 பில்லியன் அரசவருவாயை ஒருபோதும் பெறமுடியாது.நடைமுறையில் 1000-1300 பில்லியன் வரையிலே அரச வருவாய் கிடைக்கப் பெறுகிறது.

அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த அரசாங்கத்திடம் போதுமான நிதி கிடையாது.2020ஆம் ஆண்டுக்கான மொத்த மூலதன செலவு419 பில்லியன்,2019ஆம் ஆண்டுக்கான மூலதன செலவு947 பில்லியன் ஆனால் எமது அரசாங்கம் செயற்படவில்லை என்று தற்போது குறிப்பிடுகிறார்கள்.

கிராமிய அபிவிருத்திக்காக பல செயற்திட்டங்கள் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மாகாண சபைதேர்தலின் வெற்றிக்காக குறிப்பிடப்படும் போலியான வாக்குறுதிகள்.

எமது ஆட்சியில் பல சவால்கள் காணப்பட்டன 2 ரில்லியன் நிதியை கைவசம் வைத்துக் கொண்டு 4 ரில்லியன் செலவு செய்ய எம்மால் முடிந்தது.தற்போது 1 ரில்லியன் வைத்துக் கொண்டு 5 ரில்லியன் செலவு செய்ய போகிறார்கள்.அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் நகைப்புக்குரியது.இலங்கையின் வரவு- செலவு திட்டம்,நிதியமைச்சரின் அரசியல் செயற்பாடுகள், ஆகியவை சர்வதேச சஞ்சிகைகளின் பிரதான செய்தியாக காணப்பட்டன

அரச முறை கடன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.கடந்த 8ம் திகதி நிதியமைச்சர் அமைச்சரவையில் ஒரு திருத்தத்தை முன்வைத்தார்.இவ்வருடத்திற்கு மாத்திரம் 6885  பில்லியன் நிதி அரச முறை கடன்களை செலுத்த தேவை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி பிணைமுறி மற்றும்தனியார் வங்கிகளில் பெற்றுக் கொண்ட  2624பில்லியன் நிதி இவற்றை உரிய காலத்தில்செலுத்த வேண்டும்.

அரச முறைகேடான நெருக்கடி குறித்து 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டேன்.

அதிகாரிகள் முன்னிலையில் அவர் ஆட்சியில் நிர்மாணித்த அபிவிருத்திகளை விற்றாவது அரச கடன்களை செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட நிர்மாணிப்புக்களை விற்றால் 6.4 பில்லியன் டொலர்கள் மாத்திரமே கிடைக்கப் பெறும். ஆனால் இவ்வருடத்திற்கு மாத்திரம் 6.9 பில்லியன் டொலர்கள் கடனாக செலுத்தப்படவேண்டும். ஆகவே சொத்துக்கள் கடன்களை அடைப்பதற்கு போதுமானதன்று.

கடன்சுமையில் இருந்து மீள்வதற்கு தேசிய வளங்களை விற்பது முறையான தீர்மானமல்ல,ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கை கடன்சுமைக்குள் சிக்குண்டுள்ளது.

ஈரான்,மொசாம்பிக் ஆகிய நாடுகளின் பொருளாதார மட்டத்தில் இலங்கை தற்போது உள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளின் பட்டியலை அடைய நேரிடும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிடுகிறார்கள்.

கொவிட் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம்,ஆகியவற்றின் ஊடாக 1800மில்லியன் நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கை உட்பட 11 நாடுகளுக்கு சர்வதே ச நிதி அமைப்புக்கள் நிதியுதவியை மேலதிகமாக வழங்கவில்லை.

பொருளாதார வீழ்ச்சிக்கு  கொவிட்-19 தாக்கம் ஒரு காரணியல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆகவே கட்டாயம் அரச முறை கடன்களை உரிய நேரத்தி;ல் செலுத்தியாக வேண்டும்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை, முரணான நிதிமுகாமைத்துவம், தான்தோன்றித்தனமான போக்கு ஆகியவற்றின் ஊடாக அரச முறைகள்  செலுத்தல்,அரச வருவாய அதிகரித்தல் ஆகியவற்றுக்கு தீர்வு காண முடியாது.

பழைய திட்டங்களின் ஊடாக இவ்விரு சவால்களையும் வெற்றிக் கொள்ள முடியாது.சிறந்த தலைமுறையினர், சரவதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்கள் ஆட்சியினை பொறுப்பேற்க வேண்டும். ஒரு குடும்பத்தால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.