(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை குறைந்தளவானோரே கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கம் பதிலளித்தது. 

Articles Tagged Under: மனுஷ நாணயக்கார | Virakesari.lk

ஆனால் தற்போது கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 260 ஐ கடந்துள்ளதால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அத்தோடு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறும் அரசாங்கம் டெலிகொம் நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுவதற்கு 2 பில்லியன் செலவிடுகிறது. இவ்வாறான வீண் செலவுகளை தவிர்த்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உதயங்க வீரதுங்கவால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உக்ரேன் கொத்தணி தற்போது தலாதா மாளிகையிலும் புகுந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுமால் 260 பேர் உயிரிழந்தனர்.

ஆனால் தற்போது கொவிட் தொற்றால் 260 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது உயிரித்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்ததை விட கொவிட் தொற்றால் மக்கள் உயிரிழக்கவில்லை என்று பதிலளித்தார்கள்.

ஆனால் தற்போது உயிர்த்த ஞாயிறு தொற்றால் உயிரிழந்தவர்களை விட அதிகமானோர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சர் பதவி விலகியிருக்க வேண்டும்.

காலி போன்ற பிரதேசங்களில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்படும் எண்ணிக்கையிலிருந்து மாறுபடுவதை நாம் மதிப்பீட்டின் மூலம் கண்டறிந்துள்ளோம்.

அபாயம் குறைவு என்று மக்களுக்கு காண்பிப்பதற்காக எண்ணிக்கையை குறைவாகக் கூறி மக்களை மேலும் அச்சுறுத்தல் மிக்க நிலைக்கு தள்ள வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம். 

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி பற்றி பெரிதாக பேசப்பட்டது. ஆனால் அதனை விடவும் பாரிய மோசடி சீனி வரி குறைப்பின் மூலம் இடம்பெற்றுள்ளது.

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள பணம் போதாதென கூறுபவர்கள் டெலிகொம் நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுவதற்கு 2 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளனர். தற்போதுள்ள நிலைமையில் இது அநாவசியமானதாகும். எனவே இவ்வாறான வீண் செலவுகளை தவிர்த்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.