(ஆர்.யசி)

நாட்டின் தேசிய வளங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்குவதில் அரசாங்கத்தில் பலருக்கு துளியேனும் விருப்பமில்லை என்றாலும், இப்போதுள்ள நிலைமையில் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் மாற்று வழிமுறையொன்று இல்லை என ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். 

East Container Terminal blunder: Learn from Chinese | Daily FT

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி விவகாரத்தில் இந்தியாவை இணைத்துக்கொள்வதில் பலருக்கு விருப்பமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள்  எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதை அடுத்து ஆளும் தரப்பின் முக்கிய  அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

இதில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறுகையில்,

இலங்கையின் தேசிய வளங்களை நாமே பாதுகாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள், நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் எதுவும் எமது ஆட்சியில் இடம்பெறாது. எனினும் கொழும்பு துறைமுக விவகாரத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கவில்லை, மாறாக தற்போதுள்ள நிலைமையில் எம்மிடம் மாற்று வேலைத்திட்டம் ஒன்று இல்லை, 

இந்திய நிறுவனத்துடன் இணைந்து ஆனாலும் துறைமுகத்தின் உரிமத்தில் பெரும்பான்மை எம்மிடம் உள்ள வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

என்னைப் பொறுத்த வரையில் கொழும்பு துறைமுக விடயத்தில் வேறு நாட்டினை இணைத்துக்கொண்டுள்ளமையை  நான் விரும்பவில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இது குறித்து கூறுகையில்,

இலங்கையின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமையில் நாட்டின் தேசிய பொருளாதாரம் மிக மோசமாக பாதித்துள்ளது. எனவே துரிதமாக நாட்டினை மீட்டெடுக்க இருக்கும்  வழிமுறை என்ன என்பதையே ஆராய வேண்டியுள்ளது. 

துரித அபிவிருத்தி என்பதற்காக நாட்டின் வளங்களை விற்க வேண்டும் என்பதல்ல, ஆனால் வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைத்துக்கொண்டு பயணிப்பதில் தவறேதும் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புடன் செயற்பட்டால் விரைவான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும், ஆனால் தனிப்பட்ட முறையின் இந்த திட்டத்தை நான் விரும்பவில்லை. 

ஆனால் எமக்கு மாற்று வழிமுறை ஒன்று இல்லை, இப்போதுள்ள நிலையில் இவ்வாறான அபிவிருத்தியே சாத்தியமாயுள்ளது என்றார். பாரிய முதலீடுகளை கொண்டே இவற்றை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

அமைச்சர் பிரசன்ன ரணவீர இது குறித்து கூறுகையில்,

நாட்டின் வளங்களை விற்க நாம் நடவடிக்கை எடுக்கவில்லை, நாட்டினை அபிவிருத்தி செய்யவே நாம் போராடிக்கொடுள்ளோம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்றதும், சர்வதேச முதலீட்டாளர்கள் என்ற பெயரில் நாட்டுக்கு பொருத்தமில்லாத நபர்களை கொண்டுவந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்ததையும் மறந்துவிட வேண்டாம். நாம் அவ்வாறு எந்த மோசடிகளையும் செய்யவில்லை.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய எடுத்த முயற்சியை அடுத்தே நாட்டின் இந்த குழப்பநிலை உருவாகியுள்ளது. 

ஆனால் துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால் இவ்வாறான முதலீட்டாளர்களின் உதவியுடனேயே வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காகவே நாம் இவ்வாறான தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம். ஆனால் என்னை பொறுத்த வரையில் கொழும்பு துறைமுகம் முழுமையாக எம் வசம் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன் என்றார்.

அமைச்சர் உதய கம்மன்பில இது குறித்து தெரிவிக்கையில்,

நாம் கடந்த தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மீறமாட்டோம், தேசிய வளங்களை பாதுகாத்து நாட்டினை அபிவிருத்தி அடையச் செய்வதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கதின் நோக்கமாகும்.

முன்னைய ஆட்சியாளர்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி இந்த நாட்டின் பிரதான அபிவிருத்தி மையங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்கு நடவடிக்கை எடுத்தனர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனினும் அந்த தவறை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்தில் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை, அமைச்சரவையிலும் அதிகளவில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. எனினும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இவ்வாறான நகர்வுகளையே இப்போது எம்மால் கையாள முடியும் எனவும் அவர் கூறினார்.