சஹாப்தீன் -

இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல், சிவில், விவகாரங்களில் பொருத்தமான தலைமைகளில்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டியுள்ளது. தவறும் பட்சத்தில் முஸ்லிம்கள் மிகப் பெரியளவில் பாதிக்கப்படுவதனை தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.

இன்று முஸ்லிம்கள் மத்தியில் எல்லாத்துறைகளுக்கும் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் பேரினவாதிகளின் தாளத்திற்கு ஆட்டம் போட்டுக் கொண்டும், போலி வேசமிட்டு உபதேசம் செய்கின்றவர்களாகவுமே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களினால் சமூகம் நன்மைகளை அதிக பாதிப்புக்களுக்கே முகங்கொடுத்துள்ளது.

சமூக சிந்தனையில்லை
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எரிக்கபடுகின்ற முஸ்லிம்களின் சாம்பலைத் தாருங்கள் அடக்கம் செய்வதற்கென்று கோரும் நிலையிலேயே முஸ்லிம் மார்க்கத் தலைவர்களின் அமைப்பினது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

முஸ்லிம்களின் வாக்குகளினால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அப்போது கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனை இருக்கவில்லை.

பின்னர் வரவு – செலவு திட்டத்திற்கும் ஆதரவு அளித்தார்கள். அதன்போதும் கூட சமூக சிந்தனை இருக்கவில்லை. ஆட்சியாளர்களின் அன்பைப் பெற வேண்டுமென்பதனை தவிர வேறு எண்ணம் அவர்களிடம் கிடையாது. ஆயினும், நல்லது நடக்குமென்று சொன்னார்கள்.

கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்யலாமா என்பதனை முடிவு செய்வதற்காக இன்னுமொரு நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டது. அக்குழு அடக்கம் செய்வதற்கு முடியுமென்று தெரிவித்து இருந்தது. இந்தத் தகவல் கசிய ஆரம்பித்தவுடன் அடக்கம் செய்வதற்குரிய அனுமதி கூட எங்களின் முயற்சியினால் தான் என்று கல்முனையிலிருந்து அதற்கான பொறுப்பை ஏற்கும் குரலும் வெளிப்பட்டது. பின்னர் என்ன நடந்தது? அப்போது அதே குரல் மௌனமாகிவிட்டது.  

ஆகவே, முஸ்லிம்களின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகம் பற்றி சிந்திக்காது ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்வதற்கு எதனைச் செய்யலாமென்ற அரசியல் கணக்குகளைப் போடுவதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், முஸ்லிம்களுக்கு அரசியல்வாதிகளும், மார்க்கத் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகத்திற்குப் பொருத்தமானவர்களாக இல்லை. இவர்களை தெரிவு செய்தமை முஸ்லிம் சமூகம் தனக்குத்தானே படுகுழி தோண்டிய செயலாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்துச் செயற்பட்டார்கள். அவர்களின் முடிவுகளில் எங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று தெரிவித்துக் கொண்டாலும், அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாகவே தற்போது வரையில் இருக்கின்றார்கள். ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பேரில் தன்னிலை அறிக்கைகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள். இதன் மூலம் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்டு நாடகமாடிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

முஸ்லிம்களிடையே பல அரசியல் கட்சிகள் உள்ளன. எல்லா அரசியல் கட்சிகளும் சமூகத்தின் பேரால் இலபமீட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அவர்களின் இந்நோக்கத்தை முஸ்லிம் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. முஸ்லிம் சமூகத்தினர் ‘நமது கட்சிகள் நம்வர்கள்’ எனும் வெற்றுக் கோட்பாட்டிற்குள் அமிழ்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் தமது அரசியல்வாதிகளின் கருத்துக்களில் உள்ள சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது கட்சிப்பற்றால், இனப்பற்றால் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் கட்சிகள் எவற்றிடமும் சமூகம் சார்ந்த அரசியல் கொள்கைகள் கிடையாது. ஆட்சியாளர்களுடன் இறுக்கமான உறவை மட்டும் பேணி தம்மை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலைச் செய்யாதிருக்கின்ற அதே வேளையில், பௌத்த பேரினவாதிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கும் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக பேசினால் பாராட்டுகின்றார்கள். ஆனால், தமிழ்த் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிழைகளை சுட்டிக் காட்டினால் எங்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாமென்று தடாலடியாகக் கூறிவிடுகின்றார்கள்.  ஆட்சியாளர்களின் அநீதிகளை ஊடக அறிக்கைகளின் மூலமாக மட்டும் கண்டிக்கின்றார்கள். பின்னர் அதனைப் பற்றி கவலையில்லாது இருக்கின்றார்கள்.

வெறும் உணர்ச்சிக் கோஷங்கள்
முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை மேற்கொள்ளாதிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தை பயனில்லாத உணர்ச்சிக் கோஷங்களின் அடிப்படையிலேயே வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள். காலத்திற்கு காலம் தமது கோஷங்களை மாற்றியும் வந்துள்ளார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற போது, வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற மாகாணம் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைவதாக இருந்தாலும், பிரிவதாக இருந்தாலும் நிபந்தனையுடனேயே ஆதரிப்போம் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். இவர்களின் இத்தகைய கருத்துக்களினால் முஸ்லிம் கவரப்பட்டார்கள். பெரும் ஆதரவையும் வழங்கினார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் இக்கோரிக்கையை பௌத்த, சிங்கள அரசியல் தலைமைகளும், தேசிய கடும்போக்காளர்களும் பிரிவினைவாதக் கோரிக்கையாகவே பார்த்தார்கள். தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைக்கின்றார்கள் என்றார்கள். தமிழ்த் தரப்பிடமிருந்தும் அதற்கு ஆதரவு கிட்டியிருக்கவில்லை.

பின்னர் நிலத்தொடர்பற்ற மாகாணக் கோரிக்கையை கைவிட்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளையும் இணைத்து தென்கிழக்கு அலகு கோரிக்கையை முன் வைத்தார்கள். தென்கிழக்கு அலகு கோரிக்கையை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு அலகு கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற கரையோர மாவட்டக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அம்பாறை மாவட்ட தமிழர்களும் தென்கிழக்கு அலகையும், கரையோர மாவட்டக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வாறு ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக வெற்றுக் கோசங்களே தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.  

குறிப்பாக, கடந்த பொதுத் தேர்தலில் கரையோர மாவட்டக் கோரிக்கை பற்றி ஒரு வசனம் கூட பேசவில்லை. அம்பாறை மாவட்டத்தை வெல்ல வேண்டும். முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். அத்தோடு கல்முனையை பாதுகாக்க வேண்டுமென்ற கோசத்தையும் முன் வைத்து வாக்குளைப் பெற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் தேர்தலுக்கு தேர்தல் கோசங்களை மாற்றிக் கொண்டிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் சமூகம் பற்றிய அக்கறையும், அதன் எதிர்காலத்திற்குரிய திட்டங்கள் இல்லாதிருப்பதேயாகும். இத்தகைய நிலையுள்ளவர்கள் பொருத்தமற்றவர்கள். அவர்கள் சமூகத்திற்கு தலைமை தாங்கும் போதும், இவ்வாறான பின்னடைவு நிலைமைகள் தவிர்க்க முடியாதவையே. முஸ்லிம்கள் நீண்ட காலமாக  தமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று கூறுகின்றார்கள். அதற்கு காரணம் அவர்கள் நீண்டகாலமாக பொருத்தமற்றவர்களையே பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள். இதனால்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருக்கின்றன.

முஸ்லிம்களிடையே அரசியல் கட்சிகள் மலிந்துள்ளதைப் போன்று மார்க்க விடயங்களை கையாளும் அமைப்புக்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. அமைப்புக்களிடையே காணப்படும் போட்டிகளினால் சமூகத்தினரிடையே பிரிவினைகளே எஞ்சியுள்ளன. முஸ்லிம்களின் மீது சிங்கள, பௌத்த இனவாதிகளின் கெடுபிடிகள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் இருந்து வந்துள்ளன. ஆயினும், முஸ்லிம்களிடையே அரசியல் கட்சிகளும், மார்க்கப் பிரிவுகளும் அதிகரித்தமைத் தொடர்ந்து பௌத்த, சிங்கள இனவாதிகளின் கெடுபிடிகளும், நெருக்குதல்களும், தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

நிலையான கொள்கையில்லை
அரசியல் கட்சிகள் சமூகத்தினை கொள்கைகளின் அடிப்படையில் வழி நடத்தாது சுயநலத் தேவைகளுக்காக அரசியல் ரீதியாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைக்கொரு நிலைப்பாடு, நாளைக்கொரு நிலைப்பாடு என்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கட்சிக்கட்டுப்பாடும், ஒழுக்கவிழுமியங்களும் முழுமையாக தேய்வடைந்துள்ளன. கட்சியின் பெயரால் எவரும் அறிக்கைகளை விடவும், முடிவுகளை எடுக்கவும் முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் இத்தகைய ‘கையறு நிலை அரசியலால்’ மாற்று இனத்தவர்கள் முஸ்லிம்களை வேடிக்கை பார்க்கும் நிலையை தோற்றுவித்துள்ளனர். இதனால் முற்போக்காக சிந்திக்கின்ற பௌத்த, சிங்கள மக்களிடையே முஸ்லிம்களைப் பற்றிய நல்ல அபிராயங்களையும் இல்லாமல் செய்துள்ளனர்.

சமூகத்தின் குரலாக இருப்பதற்காக அரசியல் கட்சி அவசியமென்று கட்சி ஆரம்பித்தவர்கள், தங்களின் சுயநலன்களுக்காக முரண்பட்டுக் கொண்டு ஒரு கட்சியை பல கூறாக்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களை அரசியல் கட்சி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரித்து வைத்துள்ளார்கள்.

முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டுமென்று ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல்களில் கேட்டுக் கொண்டார்களேயன்றி, ஒற்றுமைப்படுவதற்குரிய எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை. பணத்திற்கும், பதவிக்கும் சேற்றில் நாட்டிய கம்புகள் போன்று செயற்பட்டதனால் முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைத்துள்ளார்கள்.

சமயயோசனை, முன்திட்டம் எதுவுமில்லாது செயற்பட்டார்களேயன்றி, பௌத்த கடும்போக்குவாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்குரிய புத்திசாதுரியமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

பௌத்த சிங்கள கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை இலக்கு வைத்துள்ளார்கள். அதனை மையமாகக் கொண்டு ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் வரையில் தமது ஆக்கிரமிப்பை புரிந்த போது, முஸ்லிம் அரசியல்வாதிகளும், பொறுப்பு வாய்ந்த மார்க்கத் தலைவர்களும் அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்டதென்று கண்டிக்கவில்லை.

மாறாக, பௌத்த, சிங்கள இனவாதிகளைக் கண்டித்தார்கள். அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமென்று தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்களை சர்வதேசத்தின் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாப்பதற்காக முஸ்லிம்களின் நாடுகளுக்கு சென்று ஆதரவு தேடிக் கொண்டார்கள். ஆட்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டார்கள்.

ஆனால், எத்தனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்ற அநியாயத்திற்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தினார்கள் என்று முஸ்லிம்கள் பார்க்க வேண்டும்.

தற்போது, உலக பொதுவிக்கு அப்பால் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பல காரணங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்தக் காரணமும் விஞ்ஞான அடிப்படையில் அமையவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே முஸ்லிம்களின் தனியார் சட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டுமென்று பௌத்த, சிங்கள கடும்போக்காளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களின் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய நடைமுறை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் எல்லா நாடுகளிலும் உள்ளன.

பொருத்தமற்ற பிரதிநிதிகள்
இவ்வாறு முஸ்லிம்கள் அரசியல், சமூக, பொருளாதார, மத விவகாரங்களில் தொடர்ச்சியாக பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு பொருத்தமற்றவர்கள் தலைவர்களாக இருந்து கொண்டிருப்பதும், சமூகத்தின் மீது பற்றில்லாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதும் பிரதான காரணங்களாகும்.

எனவே, முஸ்லிம்களுக்கு அரசியல், சமய, சமூகம் சார்ந்த விவகாரங்களை கையாள்வதற்கு பொருத்தமான தலைவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. நீண்ட காலமாக வெற்றிடமாக காணப்படும் தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்படாது இன்றுள்ளவர்ளையே தலைவர்களாக ஏற்றுக் கொண்டால் முஸ்லிம்கள் மென்மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியேற்படும். பொருத்தமற்றவர்கள் ஒரு சமூகத்தின் தலைவர்களாக இருந்தால் அச்சமூகத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கின்றவர்களாக மாற்று சமூகத்தின் தலைவர்களே இருப்பார்கள்.

முஸ்லிம்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களின் மீது வைத்த அதீத நம்பிக்கைகள் பொய்த்துப் போயுள்ளன. அவர்கள் சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது என்றுமில்லாதவாறு தெளிவாகியுள்ளது. ஆனாலும், முஸ்லிம்கள் பாடங்களை கற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமாகும்.

முஸ்லிம் கட்சிகளினால் கட்சிக்கட்டுப்பாட்டை மீறுகின்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க முடிவதில்லை. சமூகத்திற்கும், கட்சிக்கும் விரோமாக செயற்பட்டாலும் தண்டிக்கப்படுவதில்லை. இதற்கு தலைமைகளின் ஆளுமைக் குறைபாடே பிரதான காரணமாகும்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்காத முடியாத கட்சிகளினால் சிங்கள, பௌத்த கடும்போக்காளர்களின் எதிர் நடவடிக்கைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை  பாதுகாத்துக் கொள்ள முடியுமென்று இன்னும் நம்புவது மண் குதிரையில் ஏறியிருப்பதற்குச் சமனாகும்.

முஸ்லிம்களுக்கு ஆளுமையுள்ள தலைமைகள் இருக்கக் கூடாதென்பதே பேரினவாதிகளின் திட்டமாகும். இதனால்தான் எம்.எச்.எம்.அஸ்ரப்பை விபத்தில் சிக்கி மறைந்தார். பேரினவாத அரசாங்கங்கள் இன்னும் அஸ்ரப்பின் கொலைக்கு யார் காரணமென்று கண்டு பிடிக்கவில்லை. இதில், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அக்கறையில்லை. முஸ்லிம்களுக்கு பொருத்தமில்லாதவர்கள் தலைவர்களாக இருக்கின்றார்கள் என்று பேசப்படும் நிலையில், பேரினவாதிகளும், அதிகாரத் தரப்பினர்களும் தற்போதுள்ள தலைவர்களை அரசியலிருந்து வெளியேற்றிவிட்டு, தங்களுக்கு சேவகம் செய்கின்றவர்களை தலைவர்களாக மாற்றுவதற்குரிய திட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

 இதனால், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கின்றார்கள். பேரினவாதிகளின் இச்செயற்பாடுகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்கிறார்கள் என்பது கசப்பான தகவலாகும். முஸ்லிம்களின் அரசியல் சிதைக்கப்பட்டுள்ளமையால் முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மலிவுக்கடைகளாகியுள்ளன.

எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண முடியாதவர்கள், சமூகத்திற்காக உண்மையாகக் குரல் கொடுக்க இயலாதவர்கள், முஸ்லிம்களின் எதிர்காலத்திற்குரிய திட்டங்களைக் கொண்டிராதவர்கள், காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்களை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்கள், சமூகத்தின் எதிர்பார்ப்பை மறந்தவர்களே இன்று முஸ்லிம்களின் தலைவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள்.

இவர்களை மாற்றியமைத்து சிறந்த தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறான நிலையை அடைந்து கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம் வாக்காளர்கள் சலுகைகளுக்காகவும், பாரம்பரிய கட்சிக்காகவும், பிரதேசவாதத்திற்காகவும் வாக்களிக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். விடுபடாதவரை சிறந்தவர்களை தலைவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்ய முடியாது.