(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் மோசடி வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தாக்கல் செய்துள்ள இவ்வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் இன்று ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கும் கையளிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்  உபாலி லியனகே,  அக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நடவடிக்கை பணிப்பாளர் ரவீந்ர முனசிங்க ஆகியோருக்கு எதிராகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றப் பகிர்வு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான விலைமனு கோரும் போது அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று இது தொடர்பிலான குற்றப் பகிர்வு பத்திரம், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டி ஆரச்சி முன்னிலையில் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய தலா 10 இலசம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.