- குடந்தையான் -
தமிழகத்தின் முதல்வர் யார்? என்பதை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க. அறிவிக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களின் அறிவிப்பு, சசிகலாவின் விடுதலை, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடு குறித்த தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் ரீதியிலான நிர்பந்தம், என்று  ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக கடும் நெருக்கடிகளை அளித்துக் கொண்டிருப்பதால், அ.தி.மு.க. தடுமாறிவருகின்றது.

 ‘அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர்’ என்ற பதவியில் இருந்தவாறே, நான்காண்டு தண்டனையை அனுபவிக்க சிறை சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இம்மாதம் 27ஆம் திகதியன்று சிறையில் இருந்து விடுதலையாகிறார்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவர் தலைமையிலான அணியுடன் தற்போதைய அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து ஆதரவு தரக் கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் வெளியாகி இருப்பதால், அ.தி.மு.க.வின் ‘இரட்டை தலைமை’ முன்னெச்சரிக்கையுடன் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி தங்களை தற்காத்து கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாகவே கட்சியை வழிநடத்த 11 பேரைக் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.

அதேதருணத்தில் அ.தி.மு.க. ஆட்சி, கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தகைய இடையூறுமின்றி தொடர்வதற்கு மறைமுகமாக உதவி செய்துவரும் பா.ஜ.க., அதன் பிரதிபலனாக வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்  இடம்பெறுவதுடன், அக்கட்சியின் ஆட்சி அதிகாரத்திலும் பங்குபற்றும் உரிமையை கோருகிறது.

இதனை வலுவாக மறுக்கும் அ.தி.மு.க.வின் இரட்டை தலைமைகள், கட்சியின் மூத்த நிர்வாகியை பொதுக்குழுவில், அவர்களுக்கு எதிராக ஆணித்தரமாக பேச வைத்து, தங்களின் எதிர்ப்பை மறைமுகமாக எடுத்துரைக்கிறார்கள். இதனையறிந்த பா.ஜ.க., முதல்வர் எடப்பாடியை அது குறித்து விளக்கம் கேட்கவும், அவர் வழக்கம் போல் சமாதானம் செய்து, கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை ஏனைய அரசியல் கட்சிகளுடன், அவர்கள் கூட்டணியில் இருந்தாலும் அமைச்சரவையில் இடம்பெற்றதில்லை. கடந்த காலத்தில் தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தாலும், அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்குபற்றவில்லை. காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தும், அதற்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியும் அனுமதிக்கவில்லை.

ஆனால் தற்போதைய சூழல் வேறாக இருப்பதாலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்று உறுதியாக நம்புவதாலும், அ.தி.மு.க.வை மிரட்டியும், கெஞ்சியும், கொஞ்சியும் ஆட்சியில் இடம்பெறுவதற்கான காய் நகர்த்தல்களைச் செய்து வருகின்றது.

அதேநேரம், அ.தி.மு.க. கூட்டணியில்  வலிமையான வாக்கு வங்கியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சியை சமாதானப்படுத்தும் பணியை அ.தி.மு.க. மேற்கொண்டிருக்கிறது முதல்வரின் நம்பிக்கைக்குரிய கொங்கு மண்டலத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அமைச்சர்கள் எந்த விளக்கமும் அளிக்காத தருணத்தில், ராமதாஸ், ‘கூட்டணி குறித்தோ. தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை என்றும், வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு குறித்தும், இம்மாதம்  நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்தும் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது’ என்று அவசரமாக தெரிவித்திருப்பதன் மூலம் இரண்டு விடயங்கள் கசியத் தொடங்கி இருக்கின்றன.

அதாவது அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணியில் உள்ள பா.ஜ.க. ஏற்கவில்லை என்பதால், அக்கட்சிக்கு சில தொகுதிகளை அதிகரித்து சமாதானப்படுத்தி சமரசத்தை மேற்கொண்டதைப் போல, எடப்பாடியை  முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.  அரசியல் களத்தில் ‘பேரம் பேசுவதில்  நிபுணத்துவம் பெற்றவரான’ ராமதாஸ், தங்களுக்ளுக்கான தொகுதிகளை அதிகரித்துக் கொண்டதுடன், தான் கேட்கும் தொகுதிகளைத் தான் தர வேண்டுமென்றும் பிடிவாதமாக பேசி பட்டியலொன்றையும் வழங்கியிருக்கிறார்.

அத்துடன் ராமதாஸ், இது தொடர்பான முடிவை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் அறிக்கையாக வெளியிடுவேன் என்ற விடயத்தையும் அந்த அமைச்சருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த இரண்டு அமைச்சர்களும் ராமதாஸின் நிபந்தனையை முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள் முதல்வரும் இதுதொடர்பாக பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறன.

இதேவேளை, தமிழக  பொறுப்பாளரான ரவி செய்தியாளர்களை சந்தித்த போது, ‘தமிழகத்தில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் தான் எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்றும், அ.தி.மு.க.வின் இரட்டை தலைமைகள் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க. ‘வேல் யாத்திரை’, ‘நம்ம ஊரு பொங்கல்’ போன்ற நிகழ்வுகளை அரசியல் ஆதாயம் கருதி தமிழகத்தில்  முன்னெடுத்தாலும், டெல்லியின் எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும் கண்டுகொள்ளாமல், ஆலோசனையையும் ஏற்காமல், தன்னுடைய ‘தனி அறுதி பெரும்பான்மை’ அரசியல் வலிமையை, அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் எண்ணத்துடன் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் பா.ஜ.க.விற்கு மக்களின் ஆதரவு குறைந்து வருகிறது.

இதேநேரம், அண்மையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில், 'இலங்கையில் தமிழர்களுக்கு  சுயநிர்ணய உரிமைகளை வழங்கவும், அதிகாரப் பரவலுக்கு அடித்தளமிட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுமான மாகாண சபை முறை இரத்து  செய்யப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்ற தீர்மானமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடிகண்டனம் தெரிவித்திருப்பதும்,  இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல் இயங்கும் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க. முன்வைக்கும் 'செக்” ஆகவுள்ளது.

இதனிடையே ரஜினி ரசிகர்கள்,‘அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த முடிவை, ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி’ கவனயீர்ப்பு அறவழி போராட்டத்தை சென்னையில் முன்னெடுத்தனர். எதிர்பார்த்ததை விட அதிகளவிலான இரசிகர்கள் ஒன்று கூடியதால், மிரண்டு போன பொலிஸார், போராட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு இதனை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

அவர்களும் முன்னரே இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இதன் பின்னணியில் ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சிலரும், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களின் மறைமுக ஆதரவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அரசியல் களத்தில் குறிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தல் வரை ரஜினி விவகாரம் தொடர்ச்சியாக மக்கள் மனதில் பேசப்படவேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில், ‘பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. சார்ந்த  அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென  ரஜினிகாந்த்தை அறிக்கை  விட செய்து,  அவரது இரசிகர்களின் வாக்கை தங்களது கூட்டணிக்கு பெறவேண்டும் என்ற வியூகத்தில் பா.ஜ.க. செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ‘கனவு’ இம்முறை பலிக்குமா? என்பது தமிழக மக்களின் கைகளில்தான் இருக்கிறது.