லோகன் பரமசாமி
கடற்தொழில் இன்று சர்வதேச முக்கியத்தவம் பெற்றதொரு தொழிலாக மாறியிருக்கிறது. இலங்கையில் கிழக்கு பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் கடற்தொழிலில் அதிகம் வருமானம் பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் சர்வதேச மீன்பிடி கைத்தொழில் தற்போது பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக வங்ககடலும் இந்து சமுத்திர ஆழ்கடல் மீன்பிடியும் இதில் கணிசமான பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவில் 34.2 சதவிகிதம் மீன்பிடி கடல்வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழல் தாங்கு திறனிலும் அதிகமாக உள்ளதென ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
கடல் வாழ் உயிரினங்களுடைய இருப்பின் சமநிலையை பேணும் வகையில் மனித நுகர்வில் கடல் உணவுக்கான பகுதியை திருத்தி கொள்ள வேண்டிய தேவையையே இது உணர்த்தி நிற்கிறது. ஆனால் அதிகளவு புரதச்சத்து கொண்ட உணவாகவும், உர வகைகள் கிருமி நாசினிகள் ஆகியவற்றின் தாக்கத்தால் மாசுபடாத உணவாகவும் கடலுணவே எடுத்து கொள்ளப்படுகிறது. இதனால் கடலுணவு மிகவும் செல்வாக்கு பெற்றதாக உலகெங்கும் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் பல அமைப்புகள் சட்ட விரேதமான வகையில் பதிவுசெய்யப்படாத, வரம்பு மீறிய ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுபடுத்தும் வகையில் சர்வதேச சட்ட அழுத்தங்களை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக இந்து மா சமுத்திரத்தில் உள்ள கடல் வளத்தில் 30 சதவீதம் சட்டத்திற்கான முரணான வகையில் கடல் வள சுற்றுச்சூழல் மீட்சிக்கு அப்பாற்பட்ட வகையில் மீன்கள் பிடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் உணவு விவசாய சபை மிக அண்மைக்காலத்தில் அறிக்கை விட்டுள்ளது.
இதனால் அதிக மீன் வளத்தை கொண்ட இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுடன் பல சக்தி வாய்ந்த நாடுகள் மீன்பிடி ஒப்பந்தங்களை செய்து கொள்வதிலும். உபகரண உள்ளிட்ட இதர வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் கடலுணவு வர்த்தகத்தில் செல்வாக்குப் பெற்று கொள்வதிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றன. குறிப்பாக சர்வதேச வல்லரசுகள் ஆழ்கடல் மீன்பிடிதுறையை தமது உள்நாட்டு கைத்தொழிலில் அரச மானியங்கள் மூலம் ஊக்குவித்தும் வருகின்றன. கடலை எல்லையாக கொண்டதொரு நாட்டின் இறையாண்மைக்குள் உட்பட்ட கடற்பிராந்தியமாக 12 கடல் மைல்கள் உள்ளன. மேலும் 24 கடல் மைல் வரையில் அதன் தொடர்ச்சியான அதிகாரத்திற்கு உட்பட்ட கடல் எல்லையாகவும், 200 கடல் மைல்கள் வரையில் பிரத்தியேகமான பொருளாதார கடல் வலயமாகவும் கொள்ளப்படுகிறது.
இந்த கடற்பொருளாதார வலயத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட அந்த பிராந்தியத்தை சேர்ந்த நாட்டு கடற்கலன்கள் சட்டபூர்வமாக மீன்பிடிக்கும் உரிமைகளை பெற்று கொள்கின்றன. இதனால் தமது உள்நாட்டு கடலுணவுத் தேவையை பூத்தி செய்து கொள்ள முடியாத நாடுகள் கடலால் சூழப் பெற்ற சிறிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கொள்வதில் தற்பொழுது போட்டியிடுகின்றன. இவைதவிர கடல் சார்பான சட்டங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளும் மேலைத்தேய செல்வாக்கு வயப்பட்டனவாகவே உள்ளன. இதனால் ஈரான், சீனா போன்ற போட்டி அரசியல் புரியும் நாடுகள் தமது ஆழ்கடல் கடற்கலன்களையும் அதுசார் நிர்வாக அமைப்புகளையும் பதிவு செய்து, சட்ட அங்கீகாரம் பெறுவதில் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றன. அதனால் கடலோரத் தீவு தேசங்களின் தேவை முக்கியத்துவம் பெறுகின்றது.
குறிப்பாக இலங்கை ’போன்ற நாடுகள் தமது மீன்பிடி கைதொழில் வளர்ச்சியின் பெயரால் தொழில் நுட்ப வளத்தில் மேம்பட்ட கடற்கலன்களை பெற்று கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை,ஆனால் வங்ககடல் மீன்பிடி அரசியலினால் மறுபக்கத்தில் தாக்கத்திற்கு உள்ளாவது வேறுயாருமல்ல இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தை தமது தாயகமாக கொண்ட தமிழ் சமுதாயமே ஆகும் .
மைய அதிகாரம் இல்லாத, அரசற்ற பாத்திரங்களான தமிழின மீனவர்கள் பாரிய பின்னடைவுகளை கண்டு வருவதையும் இலங்கையின் வடக்கு கிழக்கு கரையோரப் பிராந்தியத்தின் வறுமை நிலை குறித்தம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதமளவில் வெளிவந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை கூறுகிறது. மேலும் பல ஊடக அறிக்கைகள் தற்போது வரையில் கடற்கரையோரமாக வாழ்ந்து வரும் தமிழ் மீனவர்களின் கடின வாழ்வு குறித்த பல பதிவுகளைச் செய்து வருகின்றன. அதுபற்றிய சான்றாதாரங்களும் அதில் உள்ளன.
2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி அன்றைய வடக்கு மாகாண சபையின் ஒத்தழைப்புடன் பேசாலை மீன்பிடி துறைமுகம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இது தவிர கொழும்பு அரசாங்கங்களினால் உருவாக்கப்படும் கிழக்கு கடலோர பகுதியில் உருவாக்கப்படும் புதிய சிங்கள குடியேற்ற திட்டங்களும் அவர்களுக்கான உபகரண வசதிகளும் பாதுகாப்பும் முல்லைத்தீவு திருகோணமலை பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்களை மேலும் வறியவர்களாகவே ஆக்கி வருகிறது.
இதேவேளை, இலங்கையில் சீனக் கப்பல் கட்டும் கம்பனிகளின் ஆக்கிரமிப்பை எதிர் கொள்ளும் வகையில் இந்திய அரச தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை காண கூடியதாக உள்ளது. ஆனால் இருதரப்பும் தமிழ் மீனவர்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக அணுகுவதை விடுத்து ஆவேசம் ஊட்டும் வகையிலாக பாதிக்கப்பட்ட தரப்பு மக்களை கையாளும் நிலையை காண கூடியதாக உள்ளது. மிக அதிக அளவிலான மீனவர்கள் கைதுகளும் அதற்கான அதிக அளவிலான ஊடகங்களின் செய்தி முக்கியத்தவங்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
இந்த நிலைமைகள் மீன்பிடியில் அரசியல் வெகுவாக புகுந்த தமிழக, இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் நீடித்திருக்கும் சர்சையாக கொண்டு செல்லும் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கும் ஒரு விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதில் மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் இந்தப் பிரச்சினை பல மட்டங்களில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைப் பொருளாக நீடித்துக்கொண்டிருக்கின்றதே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்வு எட்டப்பட்டதாக இல்லை. ஆகவே இந்தப் பிரச்சினையில் கலந்துள்ள அரசியல் நீக்கம் செய்யப்பட்டு, உரிய நீண்டகால தீர்மானம் எடுக்கப்படுவதே அவசியமாகின்றது. இந்த விடயத்தில் ‘சில இலாபங்களைப் பெறுவதற்காக’ நீறுபூத்த நெருப்பாக தொடர்ந்தும் இருப்பதற்கு இடமளிக்க முடியாது. இந்த விடயத்தில் முறையான அணுகுமுறைகளும், திறந்த பேச்சுவார்த்தைகளும் தீர்க்கமான தீர்மானங்களும் அவசியமாகின்றன. இதனசம்பந்தப்பட்டுள்ள தரப்புக்கள் புரிந்து கொள்வார்களாயின் பிரச்சினைகள் தொடர்ககதையாக நீடிக்காது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM