(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது அவர்கள் முகங்கொடுத்த இரு பிரதான பிரச்சினைகளான விமான கட்டண அதிகரிப்பு மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் கட்டண அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்வு வழங்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

இது வரையில் சுமார் 73,000 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். தற்போது அவர்களை அழைத்து வருவதில் முறையான திட்டமிடலொன்று பின்பற்றப்படுகிறது. எனினும் கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் வைத்தியசாலைகளில் நெரிசல் நிலை ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தல் நிலையங்கள் பலவும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டன.

இவற்றில் எவ்வித அறிகுறிகளும் இன்றி தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்தது. இந்த சிக்கல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்தது. எனினும் தற்போது அந்த நிலைமை சீராகியுள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகள் இரு வழிமுறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விமானத்தில் வருபவர்கள் முப்படையினரால் அரச செலவில் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றமை ஒரு வழிமுறையாகும். மற்றையது வெவ்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு விமானங்கள் மூலம் இலங்கையர்கள் வருகை தருவதாகும். இதன் போது ஒவ்வொரு விமானங்களிலும் சுமார் 75 பேர் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் மாத்திரமே ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

இதன் போது வழமையாக சுமார் 300 பயணிகளுடன் வரும் விமானத்தில் 50 பயணிகள் மாத்திரமே அழைத்து வரப்படுவதால் வழமைக்கு மாறாக அதிகளவான கட்டணம் அறவிடப்படுவதாகக் கூறப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உரிய தரப்பினரிடம் கலந்துரையாடி அவ்வாறு அதிகளவான கட்டணம் அறவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த விமான கட்டணங்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இதே போன்று ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. 4 - 5 நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோருக்கு 7,500 ரூபாய் அறவிடுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களில் சிலர் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களை விட தாம் தனி அறைகளில் இருப்பதை விரும்புவதாகக் கூறினர். அவ்வாறானவர்களே ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

எனினும் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிக கட்டணத்தை அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து ஜனாதிபதி தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் விசேட சந்திப்பொன்று கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதன் போது அதிகளவான கட்டணத்தை அறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு , 4 - 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அதற்கு அடுத்த மட்டத்திலுள்ள ஹோட்டல்களில் அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் ஓரிரு தினங்களில் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.