மேடை நாடக இயக்குனர் ஸ்ரீராம் இயக்கத்தில் ''தீரன் சின்னமலை'' என்ற பெயரில் உருவாகும் இசை வடிவிலான மேடை நாடகத்தில் நடிகர் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இது தொடர்பாக நடிகர் சிபி சத்யராஜ் பேசுகையில், ''இயக்குனர் இபான் ஸ்ரீராம் சிவகங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களுடைய இசை வடிவிலான மேடை நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

அவருடைய அடுத்த முயற்சியாக சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இசை வடிவில் தயாராகியிருக்கும் மேடை நாடகத்தை உருவாக்கியிருக்கிறார்.

திரைப்படம் ஒன்றை இயக்குவது குறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் இதுகுறித்து விவரித்து, தீரன் சின்னமலையாக மேடை ஏற விருப்பமா..! என கேட்டார்.

வித்தியாசமான முயற்சி என்பதால் நானும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். எம்முடைய தந்தையின் கலையுலக குருவான எம் ஜிஆர், நடிப்புலக மேதை சிவாஜி கணேசன், மூத்த நடிகர் சிவகுமார், நாடக மேதை எம். ஆர். ராதா உள்ளிட்ட பலரும் மேடை நாடகங்களில் நடித்த பிறகே திரைத்துறையில் ஜொலித்தனர். ஒரு நடிகர் என்ற முறையில் இதனை நான் ஒப்புக் கொண்டேன்.

அதே தருணத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை பற்றி பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படவில்லை.

அவருடைய வீர வரலாறு இந்த தலைமுறைக்கும் தெரிய வேண்டும் என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். இதற்காக இரண்டு மாதம் மேடை பயிற்சி எடுத்து ஏப்ரல் 17ஆம் திகதியன்று கொண்டாடப்படும் தீரன் சின்னமலை அவர்களின் நூற்றாண்டு விழாவில் இந்த இசை வடிவிலான மேடை நாடகம் அரங்கேற இருக்கிறது.' என்றார்.

இதனிடையே நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கபடதாரி' இம்மாதம் 28ம் திகதியன்று வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.