Published by T. Saranya on 2021-01-18 09:49:15
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நேற்று (17.01.2021) குருந்தூர் மலைக்கு களவிஜம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று வழிபடுவதற்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் தடைவிதித்து வந்துள்ளனர்.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தெரியப்படுத்திய நிலையிலேயே அவர்கள் குறித்த களப் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மலைப் பகுதிக்குச்செல்ல அங்கிருந்த பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பதற்கு இடமளிக்குமாறு கூறியபோதும் பொலிஸார் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலைக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை அமைச்சர் ஒருவர் வருகைதரவுள்ள நிலையில், குருந்தூர் மலைச் சூழலில் அதற்குரிய ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் குருந்தூர் மலைச்சூழல் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், குருந்தூர் மலைக்குச் செல்வதற்காக பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளை இந்த ஏற்பாட்டு வேலைகளில் இராணுவத்தின் 591 ஆவது பிரிகேட்டின் 59 ஆவது படைப்பிரிவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.