கேகாலை மாவட்டம் கலிகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிந்தெனிய தோட்ட மேல் பிரிவில் இன்று  ஞாயிற்றுக்கிழமை  17ஆம் திகதி காலை 9.00 மணியளவில் கல்வி, கலை, கலாசார மண்டபமான ' பிரசாந்தி மண்டபம்' திறந்துவைக்கப்பட்டது. 

அவுஸ்ரேலியாவில் உள்ள வன்னி ஹோப் நிறுவனத்தின் பூரண அனுசரனையுடன் வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அமுலாக்கதில், மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் ஒழுங்கமைப்பில் , பிந்தெனிய சாய் இளைஞர் மன்றத்தினதும் ஆலய பரிபாலன சபையினதும் தோட்ட பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடனும் இந்த கலாசார கட்டிடம் நிறுவப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதன் போது பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார அமைச்சரும், கோப்பியோ நிறுவனத்தின் இலங்கைக்கான அமைப்பாளரும், சமூக சேவையாளருமான  பி.பி.தேவராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக  கோப்பியோ நிறுவனத்தின் உறுப்பினரும் மலையக மாணவர்களின் தரம் 5 ற்கான மேம்பாட்டாளருமான பாலசுப்பிரமணியம், சைவ சங்கமத்தின் அமைப்பாளருமான சமூக சேவையாளருமான திவாகரன் அவர்களும் கலந்துக் கொண்டனர். 

மற்றும் இந்த கட்டிடம் நிறுவப்பட வன்னி ஹோப் நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அனுசரணையை பெற்றுத்தந்த மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் முரளிதரன் , பேரவையின் தேசிய அமைப்பாளர் ஆர்.சந்திரமோகன் போன்றோரும் வரக்காபொல காளிகாம்பாள் ஆலய ஸ்தாபகர், ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய விநாயகமூர்த்தி அவர்கள், பிந்தெனிய தோட்ட முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குரு, சித்த ஆய்வாளரும், யோகா ஆசிரியருமான தனசேகர் போன்றோரும் தோட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பிந்தெனிய தோட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் என்போர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் முக்கிய அம்சமாக சமூக சேவையை பாராட்டி வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவரும் வரக்காபொல காளிகாம்பாள் அறநெறி பாடசாலையின் இயக்குனருமான திருமதி கோமதி அம்மையார் தோட்ட பொதுமக்களால் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கலை நிகச்சிகளும் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது .