(ஆர்.யசி)

விவசாயிகளின் உரிமைக்காகவும், காணி சட்டத்தை திருத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாளைமறுதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

இந்தியாவில் அதானி -அம்பானி நிறுவனங்கள் விவசாய நிலங்களை சூறையாடிக்கொண்டுள்ளதாக தெரிவித்து இந்திய விவசாயிகள் நீண்ட நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதனை அடிப்படையாக கொண்டே இலங்கையிலும் விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் காணி சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அடுத்தே இந்திய விவசாயிகள் போராட்டத்தை நடத்திக்கொண்டுள்ள நிலையில் அடுத்ததாக இந்த ஆக்கிரமிப்புகள்  இலங்கையிலும் இடம்பெரும் எனவும், அதானி நிறுவனம் இப்போதே இலங்கை  துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அடுத்ததாக இலங்கையில் விவசாய காணிகள் தனியார் நிறுவனங்கள் வசமாகவுள்ளதாகவும் விவசாயிகள் அமைப்புகள்  தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கமும் காணி சட்டத்தை திருத்தவுள்ளதால் அதனை எதிர்த்தும் போராடவுள்ளதாக கூறுகின்றனர்.

நாளை மறுதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ள நிலையில் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இவ்வாறான ஆர்ப்பட்டங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

எனினும் தாம் இந்திய தூதரகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவ்வமைப்பினர் கூறுகின்றனர்