ரொபட் அன்டனி 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அதில் மாகாண சபை முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும்  அதில் திருத்தங்களை செய்யவேண்டும் என்றும் சில தரப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. எனினும் அரசாங்கம் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவான தொடர்பை மேற்கொள்ள விரும்புவதால் 13ஆவது திருத்த சட்டத்தில் நீடிக்கும் என்றே கருதப்படுகின்றது 

வடக்கு - 38,  கிழக்கு - 37,  தென் -  55, மேல் - 104,  மத்திய - 58,  ஊவா - 34,  சப்ரகமுவ - 44, வடமத்திய - 33, வடமேல் - 52 

  

இலங்கையில் 1987 ஆம் ஆண்டு 13 அவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறையானது, கடந்த சில தசாப்தங்களாகவே பாரிய சவால்களை எதிர்கொண்டே வந்துள்ளது. பல்வேறு அரசியல்வாதிகளும் மாகாணசபை முறைமை  அவசியமற்றது என்ற கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருக்கின்றனர். இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்கு  மாகாணசபை முறை  அவசியமில்லை என்றும் அதனை ரத்து செய்துவிட வேண்டுமென்றும் தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள்  கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தனர். 

ஆனால் கடந்த கடந்த இரண்டு தசாப்தகாலங்களிலும் மாகாணசபை முறையை படாதபாடு பட்டது என்றே கூறவேண்டும். அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்திலேயே இந்த 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதால் அக்கட்சி இதனை தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றது. 2020 இல் உருவாகி எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் இதனை மேலும் வலுப்படுத்த  என்ற விடயத்தில் தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வருகிறது. ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் ஆகிய கட்சிக்குள் ஒரு தயக்கம் காணப்படுகிறது என்பதே யதார்த்தமாகும். 

1987 ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அத கடுமையாக அதனை எதிர்த்தது. எனினும் தற்போதைய சூழலில் சுதந்திரக் கட்சி 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதாகவே தனது நிலைப்பாட்டை அறிவித்துவருகிறது. அதாவது 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே  தமது நிலைப்பாடு என்பதை கட்சி  வெளிப்படையாக கூறிவருகிறது. எனினும் இடதுசாரி கட்சிகளை பொறுத்தவரையில் வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. வாசுதேவ நாணயக்கார,  டியு குணசேகர, திஸ்ஸ விதாரண போன்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றனர். 

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஏற்காவிடினும் கூட குறிப்பிடத்தக்க வகையிலாவது அதிகாரங்கள் இருப்பதால் அதனை ஆதரிக்கின்றன. இருக்கின்ற குறைந்தபட்ட அதிகார பகிர்வு முறையைும் இழந்துவிடக்கூடாது என்பதில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.  

அதேபோன்று 2017 ஆம் ஆண்டு உருவாகி 2019 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சியை பிடித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 13 ஆம்  திருத்தச்சட்டம் தொடர்பாக முழுமையாக எதனையும் தெரிவிக்காமல் இருக்கின்றது. ஆனால் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் 13வது திருத்த சட்டம் அவசியமற்றது என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முக்கியமாக மாகாண சபை முறைமை பயனற்றது என்ற நிலைப்பாட்டை ஆளும் கட்சியின் முக்கிய மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகளான தினேஷ் குணவர்த்தன கெஹெலிய ரம்புக்வெல மற்றும் சரத் வீரசேகர போன்ற  அரசியல்வாதிகள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் 13 ஆவது திருத்தத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் ஆளும் கட்சியில் இருக்கின்றனர்.  

’’நாட்டில் மாகாண சபை முறை தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக நாட்டில் மாகாண சபைகள் இல்லாவிடினும் மக்களுக்கான சேவைகளில் எவ்விதமான குறைபாடும் இருக்கவில்லை. எனவே மாகாண சபை முறையானது நாட்டுக்கு பயனற்றதாகும்.  மாகாண சபை முறைக்கு பதிலாக புதிய செயற்றிறன் மிக்க மக்களுக்கு சேவையாற்றக்கூடிய முறை ஒன்று குறித்து சிந்திக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் விரைவில் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளது. அதன்போது மாகாண சபை முறைக்கு பதிலாக சிறந்த பயனுள்ள முறை ஒன்றை கொண்டுவரலாமா என்பது குறித்து ஒருவேளை ஆராயப்படலாம். அவை தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது. ஆனால் மாகாண சபை முறை தோல்வியடைந்துவிட்டது’’என்று அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்  (2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்) தெரிவித்திருந்தார். அதேபோன்றதான கருத்தை அமைச்சர் சரத் வீரசேகரவும்  தெரிவித்திருந்தார்.  

 எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 திட்டத்தை ஆதரிக்கும் என்ற பிரிவினரும் இருக்கின்றனர். ஆளும் கட்சியில்  உள்ளடங்கியுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் 13 ஆவது திருத்த சட்டத்தை ஆதரிக்கின்றது. இந்நிலையில் 13ஆவது திருத்தச் சட்டம் எவ்வாறு நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டது? அதில் என்னென்ன விடயங்கள் உள்ளடங்குகின்றன? அதன் கட்டமைப்பு என்ன என்பதை பார்க்கலாம். 

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இந்த மாகாணசபை முறைமை  இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட போதிலும் கூட  அது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியிலேயே காணப்படுகின்றது. இதனை மறுக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்ட போதிலும் அது ஏனைய மாகாணங்களில் இயங்கியதைப் போன்று வடக்கு, கிழக்கு மாகாணசபைகளில் இயங்கவில்லை என்பதே யதார்த்தமாகும்.  

அதுமட்டுமன்றி  மாகாணசபை ஊடாக வழங்கப்பட்ட மிக முக்கியமான அதிகாரங்களான காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கூட இதுவரை மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. நிச்சயமாக இது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என்பது யதார்த்தமாகும். ஆனால்  குறைந்தபட்ச அதிகாரத்துடனாவது  இந்தவொரு முறைமை மட்டும் நாட்டில் காணப்படுகின்றது என்பதனை ஏற்கவேண்டும்.  

இனப்பிரச்சினைக்கான  தீர்வு தொடர்பான நகர்வுகள் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகள் உச்சநிலைக்கு சென்றிருந்த காலத்திலேயே 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டுடன் 13 ஆம் திருத்தம் அரசியலமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இலங்கையும் இந்தியாவும் இதற்கான சர்வதேச உடன்படிக்கையில் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திட்டன. இது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற அழைக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே,ஆர். ஜயவர்த்தனவுடன் முன்னாள்  இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இதில் கைச்சாத்திட்டார். அந்த ஒப்பந்தத்துக்கு அமைய 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணசபைகள் நாட்டில் உருவாக்கப்பட்டன. 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் நோக்கிலேயே இந்த மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.  அதன்படி  ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாகாண சபைக்கும் அந்த மாகாணத்தின்  பூகோள பரப்பளவு மற்றும் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

மேல்மாகாண சபையிலேயே அதிகளவான 104 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். மாகாணசபைகளுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள், 33 மூன்று உறுப்பினர்களுடன் மிக குறைந்த எண்ணிக்கையான உறுப்பினர்களுடன் வடமத்திய மாகாணசபை காணப்படுகின்றது.மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான 104 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.  

வடக்கு - 38, கிழக்கு - 37, தென் - 55, மேல் - 104, மத்திய - 58, ஊவா - 34, சப்ரகமுவ - 44, வடமத்திய - 33, வடமேல் - 52 என்றவகையில்  மாகாண சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.  

மாகாணசபைகளுக்கென சில விடயதானங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி விவசாயம், கல்வி, சுகாதாரம்,  வீடமைப்புத்திட்டம், உள்ளூராட்சி, போக்குவரத்து,  சமூக சேவை போன்ற விடயங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன்  மாகாண சபைகளுக்கென பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால்  மாகாணசபை  முறைமை கொண்டுவரப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்தும்  இதுவரை பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படவில்லை.   

அதேபோன்று கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல விடயதானங்கள்  மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும் கூட    இந்த மாகாணசபை முறைமையில்   ஒத்திசைவு  பட்டியல்  என்ற ஒரு பட்டியல் காணப்படுகின்றது. அந்த ஒத்திசைவு பட்டியலின் ஊடாக   சில விடயங்களை மாகாண சபையும் முன்னெடுக்கவேண்டும் மத்திய அரசாங்கமும் முன்னெடுக்கவேண்டும் என ஏற்பாடுகள்  கூறுகின்றன.  

உதாரணமாக கல்வி, மற்றும் சுகாதார  துறைகளை குறிப்பிடமுடியும். கல்வி மற்றும்  சுகாதார துறைகளை  மாகாணசபைகளும் கையாள்கின்றன.  மத்திய அரசாங்கமும் கையாள்கின்றன. இவ்வாறு   இந்த விடயங்கள்  காணப்படுகின்றன. 

மாகாணசபையில் கூடிய பிரதிநிதிகளை பெறுகின்ற  கட்சி அல்லது சுயேச்சைக்குழு அரசாங்கத்தை அமைக்க முடியும்.   ஆட்சியமைக்கும் தரப்பினர் சார்பில் முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவார். அதேபோன்று   முதலமைச்சர்   உட்பட ஐந்து உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை  வகிக்க முடியும்.   

வடக்கு கிழக்கு நிலை 
இந்நிலையில் இலங்கை இந்திய  ஒப்பந்தத்தின் ஒரு ஏற்பாட்டின்படி  ஆரம்பத்திலேயே   வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக 1988 ஆம் ஆண்டு  இணைக்கப்பட்டன. அதனை நிரந்தரமாக இணைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள்   சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென  இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தீர்மானிக்கப்பட்டது.  

அதன்படி மாகாண சபை முறைமை   அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்   வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபையே முதலில் உருவாக்கப்பட்டது.   அதற்கு முதலாவது முதலமைச்சராக வரதராஜ பெருமாளும் தெரிவானார். எனினும்  இறுதிவரை  வடக்கையும்  கிழக்கையும் நிரந்தரமாக இணைப்பதற்கு  சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.  பதவியிலிருந்த  ஜனாதிபதிகளினால்     வடக்கு, கிழக்கு இணைப்பானது தற்காலிகமாக ஒவ்வொரு வருடமும் நீடிக்கப்பட்டு வந்தது.  

இந்த பின்னணியில் 2006ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி   வடக்கு, கிழக்கு மாகாணங்கள்  தனித்தனியே நிறுவப்படவேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கின்  தீர்ப்பானது   வடக்கு, கிழக்கு  இணைப்பு சட்டவிரோதமானது என அறிவித்தது.அதன்படி  2007  ஆம் ஆண்டு  ஜனவர மாதம் தொடக்கம் வடமாகாணசபை கிழக்கு மாகாணசபை என இரண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. அதன்படி தற்போது வடக்கு, கிழக்கு  உட்பட 9 மாகாணசபைகள்  இயங்குகின்றன. 

ஆனால் யுத்தம்  தீவிரமடைந்ததையடுத்து  கிட்டத்தட்ட  இரண்டு தசாப்தங்களாக   வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள்   இயங்கவில்லை.   எனினும் 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தீவிரபப்படுத்தியது.  அதன்படி 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை முழுமையாக அரசாங்க படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.  அதன் பின்னர் கிழக்கு  மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது.  2008 ஆம் ஆண்டு  கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு  அங்கு மாகாணசபை நிறுவப்பட்டது.  கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக  சிவநேசத்துரை சந்திரகாந்தன்  பதவியேற்றார்.  புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து  வந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன்  அப்போதைய அரசுடன் இணைந்து போட்டியிட்டு  கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார்.     அதன்பின்னர்  யுத்தம்  முடிவடைந்ததையடுத்து 2013 ஆம்  ஆண்டு  வடமாகாண சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டு   வடக்கு மாகாண சபை  உருவாக்கப்பட்டது.    வடக்கு மாகாண சபையின் ஆட்சியை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியதுடன் அதன் முதலாவது முதலமைச்சராக ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவானார். 

இதேவேளை மாகாண சபை முறை ஆரம்பித்த காலத்திலிருந்தே  விகிதாசார தேர்தல் முறையில் சபைகளுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யபட்டனர். ஆனால் 2017ஆம் ஆண்டு  கடந்த நல்லாட்சி அரசாங்கம்   மாகாணசபை தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   அதாவது 50 வீதம்  விகிதாசார முறைமையிலும்,  50 வீதம்   தொகுதி முறைமையிலும் அமையும் வகையில் புதிய மாகாண சபை     தேர்தல் உருவாக்கப்பட்டது.  எனினும்  அந்த புதிய முறைமைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட   எல்லை நிர்ணய அறிக்கை  பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாகாண சபைகளும் அவ்வப்போது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டபோதிலும் தேர்தல் தொடர்ந்தும் நடத்தப்படாமல் தாமதிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக எந்த முறையில் தேர்தலை நடத்துவதானாலும் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்.   மறுபுறம்  கொரோனா வைரஸ் தொற்று பரவலும்  தேர்தலை நடத்துவதில் தடையாகவுள்ளது. 

 மாகாணசபை  முறைமையை பொறுத்தவரையில்   வடக்கு, கிழக்கை போன்று  தென்னிலங்கையிலும் அது ஒரு   முழுமை பெறாத  விடயமாகவே நீடிக்கிறது. காரணம்   தென்னிலங்கையின் முதலமைச்சர்கள்கூ அடிக்கடி   மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை   அதிகரிக்கவேண்டும் என்ற  கோரிக்கையையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.  

மாகாணசபை  முறைமையானது   தமிழ் மக்களின்   அரசியல் அபிலாஷைகளை  நிறைவேற்றவுமில்லை.  அதேபோன்று   நிர்வாக  செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் பாரிய தடைகளே   காணப்பட்டு வந்திருக்கின்றன.   மாகாண சபைக்கான ஆளுநர்   ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றவர்.  எனவே எப்போதுமே  ஆளுநருக்கும்  முதலமைச்சருக்குமிடையில்   முரண்பாடான நிலைமை    ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். 

 எப்படியிருப்பினும் மாகாணசபை முறைமையில் கையை வைத்தால்    நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்த பட்ச தீர்வுகூட   இல்லாமல் போய்விடும் நிலை காணப்படுகின்றது.  இந்த மாகாண சபை  தமிழ் பேசும்  மக்களின்  அரசியல் அபிலாஷைகளை   நிறைவேற்றவில்லையென்ற போதிலும் கூட      குறைந்தபட்ச அதிகாரப்பொறிமுறையை கொண்டிருக்கின்றது.  

மாகாண சபை முறையானது பல மட்டங்களிலும்  கடும்  நெருக்கடிக்கு உட்பட்டுவருகின்ற போதிலும் அதில் இந்தியாவும் சம்பந்தப்பட்டுள்ளதால் அதில் உடனடியாக மாற்றம் செய்ய முடியாது என்ற கருத்தும் தென்னிலங்கை தலைவர்கள் மத்தியில் உள்ளது.  2011 ஆம் ஆண்டு  13 ஆம் திருத்தச்  சட்டத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கப்பட்டது. ஆனால்  அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.  அத்துடன்  2009 யுத்தம் முடிந்ததும்  13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று (13-பிளஸ்)  தீர்வுகாண்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.  

இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் (2020)  அதில் மாகாண சபை முறையை மாற்றியமைக்கவேண்டும் என்றும்  அதில் திருத்தங்களை செய்யவேண்டும் என்றும் சில தரப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.  

அந்தவகையில் இந்த மாகாண சபை முறையானது 2000 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரையான அரசியல் வரலாற்றில் படாதபாடுபட்டது.  ஆனாலும்  தப்பிப்பிழைத்துக்கொண்டேயிருக்கின்றது.  அரசாங்கம்  இந்தியாவுடன்   நெருங்கிய நட்புறவான தொடர்பை மேற்கொள்ள  விரும்புவதால் 13ஆவது திருத்த சட்டத்தில்  கைவைக்காது  என்றே கருதப்படுகின்றது.  

எனினும் பொலிஸ்  மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படாது என்பது  தெளிவாகின்றது.  இதனை  2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் இருந்தே சுட்டிக்காட்டியிருந்தார். இவற்‍றை வைத்துப் பார்க்கும்போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாமல் மாகாண சபை முறை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.