(ஆர்.ராம்)
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் இலங்கை விஜயமும் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சந்திப்புக்களும், யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டமையும் அதற்கெதிராக மையங்கொண்ட போராட்டங்களும், ஜனாதிபதி கோட்டாபயவின் இரண்டாவது முகம் பற்றிய பொதுவெளிக்கருத்தும் அதனால் அம்பலமான சுயரூபமும் கடந்த வாரம் இலங்கையின் அரசியல் களத்தில் முக்கிய இடத்தினை பிடித்தன.

மழைவிட்டும் தூவானம் குறையாத நிலைமையைப் போன்றே, மேற்படி மூன்று விடயங்களின் நீட்சிகள் தற்போதும் தணியாது இருக்கையில், தமிழ்த் தேசிய தளத்தில் சத்தம் சந்தடியின்றி முக்கியமானதொரு விடயம் நடந்தேறியிருக்கின்றது. அந்த விடயத்தினை தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்பட்டுள்ள “புதியதொரு திருப்பம்” என்று கூறினாலும் மிகையாகாது. 

ஆம், தமிழ்த் தேசியப் பரப்பில் ஏட்டிக்குப்போட்டியாக பரஸ்பர குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தியவாறு செயற்பட்டு வந்த மூன்று அரசியல் கூட்டணிகள் பொதுவான தளமொன்றில் ஒருங்கிணைந்தன. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கத்திற்கான முன்மொழிவை ஒன்றிணைந்து மேற்கொள்வது என்ற பொது இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றன. 

தற்போது அந்த முன்மொழிவுக்குரிய வரைவு இறுதி செய்யப்பட்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலாவது நபராக கையொப்பமிட்டும் விட்டார். ஏனைய கூட்டுத்தரப்புக்களின் தலைவர்கள், பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள முக்கிய நாடுகளின் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளது. 

முள்ளிவாய்க்கால் அவலங்களுடனான முடிவுகளின் பின்னர் கடந்த பதினொரு ஆண்டுகளில் அதற்கான நீதிகோரும் விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களாகவும், தமிழ்த் தேசிய தளத்தில் செயற்படும் அமைப்புக்களாவும் இருந்த தமிழ்த் தேசிய அரசியல் கூட்டுகளுக்குள் எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் தான் இருந்தன.

பாதிக்கப்பட்ட தரப்பின் பெரும்பான்மையான ஆணையைப் பெற்றவர்கள் என்று மார்பு தட்டிவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘இனப்படுகொலை’ என்பதை ஆணித்தனமாக வலியுறுத்துவதை விரும்பவில்லை. அதேநேரம், சர்வதேச விசாரணை நிறைவுற்றதாக கூட்டமைப்பு பகிரங்கமாகவே கூறியிருந்ததோடு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலேயே இலங்கை விடயத்தினை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்பதிலும் திடமாக இருந்தது. 

குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சர்வதேச விசேட தீர்ப்பாயத்திற்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கோ இலங்கையை கொண்டு செல்வதற்கான பொறிமுறைகள் இல்லை என்பதை வெளிப்படுத்தியும் வந்தது. பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டபோதும், கூட்டமைப்பு மேற்படி விடயங்களிலிருந்து எள்ளளவும் மாறாதிருந்தது. அதற்கு, மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருந்த மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்தின் மீதான அதீத நம்பிக்கையும் காரணம் தான். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ, “வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை” என்ற நிலைப்பாட்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தினை வைத்துக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனுமில்லை என்று 2012 முதல் வலியுறுத்தி வந்தது. 

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் அதற்கு பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டுமாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சர்வதேச விசேட தீர்ப்பாயமொன்றுக்கோ இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் உடும்பு பிடியாக இருந்தது. 

அதற்கான, சாத்தியப்பாடுகள் இருக்கின்றவா இல்லையான என்பதற்கு அப்பால், தமக்கு, பிரதிநிதித்துவம் இல்லாமையால் தமது கருத்துக்கள் எடுபடவில்லை என்று தர்க்கம் செய்து வந்தன. இதேநேரம், வலிந்து அரசியலுக்குள் இழுத்துவரப்பட்ட விக்னேஸ்வரன் தனியாக அரசியல் கட்சியை ஆரம்பித்தோடு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் உருவாக்கி தலைமையேற்றார். 

அவர் தரப்பில், இனப்படுகொலை நடந்தது என்பதும் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்பதும் உறுதியான விடயங்களாக இருந்தன. ஆனால் அவர் தரப்பு இரட்டைத்தோணியில் கால் வைத்திருந்தது. 

அதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தளத்தில் இலங்கை விடயத்தினை வைத்துக்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது தீர்ப்பாயத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும் என்ற வலியுறுத்தியமையே அதற்கு காரணம். அதேநேரம், சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதிலும் சிரியா, மியன்மார் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட “சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை” ஒத்ததொரு கட்டமைப்புக்கான கோரிக்கையும் இருந்தது. 

இதனை கூட்டமைப்பு பகுதி அளவில் ஏற்றுக்கொண்டாலும், முன்னணி முற்றாக மறுதலித்தே வந்தது. இவ்வாறு மூன்று தரப்புக்களும் வலுத்திருந்த முரண்பாடுகளால் இவற்றைத் தனித்தனியாக கையாண்டு ஆதரவைப் பெறுவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்தன. ஜெனிவா தொடர்பில் தமது நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட ஆவணங்களை தயாரித்து தனித்தனியாக அனுப்பி இணக்கத்தினைப் பெறவும் முயன்றன. 

சுமந்திரன், அத்தகையதொரு ஆவணத்தினைப் பெற்று விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாருக்கு கையளித்து, இணக்கத்தை ஏற்படுத்த முனைந்தார். அதன் உள்ளடக்கத்தினால் ஏற்பட்ட பகிரங்க விமர்சனங்களால் ‘கொதி எண்ணெய்யிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாக’ முத்தரப்பினுள் மேலும் இடைவெளிகள் வலுத்திருந்தன. 

இத்தகையதொரு, சூழலில் தான், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனினால் மேற்படி மூன்று தரப்புக்களையும் இணைக்கும் முயற்சியொன்று எடுக்கப்பட்டது. 

இம்மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் முதலாவதாக கிளிநொச்சியில் கலந்துரையாடலைச் செய்வதற்கு ஏற்பாடாகியது.

இருப்பினும் கஜேந்திரகுமார் தரப்பு அதில் பங்கேற்றிருக்கவில்லை. ஆனால் அந்தக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் தரப்பையும் இணைத்துச் செல்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அதன் நீட்சியாக வவுனியாவில் கஜேந்திரகுமார் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

முத்தரப்பை ஒன்றுபடுத்த முயன்ற சிவகரனுக்கு கிளிநொச்சி கலந்துரையாடல் நிறைவடைந்தவுடனேயே, ‘சுமந்திரனுக்கு வெள்ளை அடிக்கின்றார்’ என்று விமர்சனங்கள் குவியத் தொடங்கியிருந்தன. இந்நிலையில் வவுனியா கூட்டத்தில் ஏற்பாட்டாளரான சிவகரன் தலைமை வகிக்க கூடாது என்று முன்னணியினர் போர்க்கொடி தூக்கினர். அதிலும் வாதப்பிரதிவாதங்கள் நீடித்தன.

பின்னர், கஜேந்திரகுமாரையும் விக்னேஸ்வரனையும் “முகம் பார்க்க வைப்பதற்கு’ மாற்றுக்கொள்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இம்மூன்று அரசியல் கூட்டுக்களில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இராப்போசனக் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

அதில் ஜெனிவா பிரேரணைக்கு முன்மொழிவுகளைச் செய்யும் பொது ஆவணத்தை தயாரிப்பதற்கு சுமந்திரன், கஜேந்திரகுமார், சர்வேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு நியமனமானது. மறுதினமே அக்குழு கூடியது. முதற்கூட்டத்திலேயே முட்டிமோதல்கள், சர்வேஸ்வரன் வெளியேற ‘சுட்ட மண் ஒட்டாது’ என்ற நிலை நீடித்தது.

எனினும், மீண்டும் கிளிநொச்சியில் இறுதி முயற்சியொன்று எடுக்கப்பட்டது. அதுபலதரப்பட்ட வாதப்பிரதிவாதங்களை அடுத்து வெற்றியைத் தந்திருக்கின்றது. 

இனப்படுகொலை, குற்றவியல் நீதிமன்றம் என்று முன்னர் ஏற்றுக்கொள்ளப்படாத விடயங்களை கூட்டமைப்பு ஏற்றிருக்கின்றது. முன்னணியும், கூட்டணியும் அடிப்படை மாறாது தமது முடிவில் நெகிழ்வு போக்கை கடைப்பிடித்திருக்கின்றன. ஆனால் கையொப்பம் இடும் பணி நிறைவடையும் வரையில் பல சிறுமைத்தனமான வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றிருக்கின்றது.

இதில், இனி “நதி மூலம் ரிஷி மூலம்”பார்க்க வேண்டியதில்லை. ஆனால் 2012இல் மன்னாரிலிருந்தே தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடு ஆரம்பமானது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அப்போது அந்த முயற்சியை எடுத்தார். 

“தமிழ்த் தேசிய அவையை ஸ்தாபித்தல்” வரையில் அம்முயற்சி வந்தாலும் சாத்தியமாகவில்லை. அதேபோன்று 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை பிரிவின் தளமான கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்புக்களும், கலந்துரையாடல்களும் பல. 

ஜெனிவா விடயத்தில், மன்னாரிலிருந்து ஒருங்கிணைக்கும் முயற்சியும், கிளிநொச்சி ஒருங்கிணைத்த தளமாகமாகவும் மாறியிருக்கின்றது. கடந்தகால கனவு நனவாகியிருக்கின்றது. வரலாறு மீளத் திரும்பியிருக்கின்றது. இவை தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இம்மாவட்டங்களின் அழிக்கமுடியாத ‘தடங்கள்’ தான்.