தமிழ் பேசும் மக்களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்குரலாய் வழிகாட்டியாய் சிறப்புற்று விளங்கும் வீரகேசரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அகவையின் நிறைவில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தமிழ் பேசும் இதயங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
தமிழ் பேசும் மக்களுக்கு தினமும் உலக நடப்புகளையும் மற்றும் முக்கிய விடயங்களையும் தருவதோடல்லாமல் தமிழ்மொழி பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்துத் துறையிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்திருந்த வர்த்தகரான ஆவணிப்பட்டி பெரி. சுப்பிரமணியம் செட்டியார் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி புதன்கிழமை வீரகேசரியை ஆரம்பித்தார். அவருக்கு தமிழகத்தில் இருந்து கொழும்பில் வாழ்ந்திருந்த எச்.நெல்லையா என்பவரும் மற்றும் பல பெரியார்களும் பெரிதும் உதவியாக இருந்தனர்.
பாரத தேசபிதா மகாத்மா காந்தியடிகள் அக்காலகட்டத்தில் இலங்கை வந்து சுற்றுப்பயணம் செய்து உரைகளை ஆற்றிச் சென்ற போதும் அவ்விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் ஏதும் அறியாதிருந்த சூழ்நிலை உணரப்பட்டதே வீரகேசரிப் பத்திரிகை உருவாக பிரதான உந்துதலாக அமைந்திருந்தது.
வீரகேசரியின் இலட்சியம் எதுவாக இருக்கும் என்பதனை சுப்பிரமணியம் செட்டியார் வீரகேசரியின் முதல் இதழில் திட்டவட்டமாகவே குறிப்பிட்டிருக்கிறார். அதை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.
“எம்மைப் பற்றி நாமே எழுதிக் கொள்வதில் எமக்கு சிறிதேனும் விரும்பமில்லை. ஆயினும் புதிதாகத் தோன்றும் பத்திரிகை தனது நோக்கத்தை முதல் வெளியீட்டில் தெரிவிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது உலக வழக்கு. ஆகையால் கீழ்கண்ட சிலவற்றை எழுத முயன்றோம்.
தன்னால் இயன்ற அளவுக்கு பொது ஜனங்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாத்தியமான காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் படைத்தவன் என்று வீறு பேசத் தயாராக இல்லை. நியாய வாய்ப்பை எட்டுணையும் மீறாமல் நடுநிலையில் இருந்து உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து பொதுமக்கள் கருத்தை நல்லமுறையில் உருவகப்படுத்த வேண்டும் என்பதையே வீரகேசரி தன் முதல் கடனாக கொள்கின்றான்.
தாராள சிந்தனையும் பரந்த நோக்கமும் சமரஸ உணர்வும் பெற்ற வீரகேசரி சாதிஇ சமய சண்டைகளில் கலந்துகொள்ளமாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம். அவனது கருத்துக்கள் நியாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக் கொண்டு உயர்ந்த நோக்குடன் வெளிவரும் வீரகேசரி தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் நாடுகின்றான்.
இவ்வாறான ஆசிரியரது நோக்கு ஒரு தாரகமந்திரமாகவே கடந்த 86 வருடங்களாக கடைப்பிக்கப்பட்டு வருவதை வாசகர்கள் நன்குணர்வார்கள். இத்தகையதொரு தனித்துவ வரலாற்றினை கொண்டு வீர சிங்கமென நிமிர்ந்து, இந்நாட்டின் தமிழ்ப் பேசும் இனத்துக்கு விசேடமாகவும் நாட்டு மக்களுக்குப் பொதுவாகவும் சேவை புரிந்துவரும் வீரகேசரியின் வாழ்க்கைப் பயணம் இலேசானதல்ல. அவன் சந்தித்த சோதனைகள் பலப்பல. அதுபோன்று சாதனைகளும் ஏராளம் என்பதில் பெருமை கொள்ளலாம்.
செட்டியாரவர்கள் குறிப்பிட்டது போன்று நடுநிலை தவறாமல் நின்று தமிழ் பேசும் மக்களுக்காக பக்கஞ்சாராது உள்ளது உள்ளபடி செய்திச் சேவையை தினமும் வழங்கியதோடு மட்டுமன்றி அவர்கள் மீது பரிவு கொண்டு பற்பல அறிவுரீதியான நடவடிக்கைகளை வீரகேசரி இந்த 86 வருட காலத்தில் அவ்வப்போது உரிய காலத்தின் தேவைக்கு இணங்க மேற்கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.
இதன் பயனாய் பல்வேறு பத்திரிகைகள் தோன்றிச் சேவை புரிந்ததை மறக்க முடியாது. ஜோதிஇ மித்திரன்இ மித்திரன் வாரமலர், நவீன விஞ்ஞானிஇ லஸ்ஸன வந்கம, விதுமின உட்பட சில பத்திரிகைகள் 1960 களில் தோற்றம் பெற்றுச் சேவைபுரிந்தன.
இவை தவிர இந்நாட்டு எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் வீரகேசரி சிறுகதைப் போட்டிகளை நடத்தியும் மற்றும் நடவடிக்கைகள் மூலமும் செயற்பட்டமை என்றும் நினைவுகூரத்தக்கது. அத்துடன் வீரகேசரி 1970 களில் மேற்கொண்ட மாதம் ஒரு நாவல் பிரசுர திட்டம் அக்காலத்தில் வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ஒன்றாகும். இதன் மூலம் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் பெருமதிப்பைப் பெற்றார்கள்.
நாட்டின் அரசியல் விடயங்களை குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி உடனுக்குடன் செய்திகளை வழங்கியதோடு மட்டுமன்றி காலத்துக்குக் காலம் எழும் அரசியல் உரிமைப் போராட்டங்களில் அனைத்து அரசியல் தரப்பினரதும் கருத்துக்களையும் அபிலாஷைகளையும் திரட்டி வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து வந்திருக்கிறது. இன்றும் அதன் பணி சோர்வின்றி தளர்வின்றித் தொடருகின்றது.
இந்த அயராத பொதுமக்கள் பணியில் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து பத்திரிகை நிர்வாகிகளும் பத்திரிகை ஆசிரியர்களும் சிறப்பாகக் கடமையாற்றி பத்திரிகையின் பெயரை மக்கள் மத்தியில் ஆழப்பதித்திருக்கிறார்கள்.
இந்தவகையில் அன்றைய காலகட்டத்தில் சுப்பிரமணியம் செட்டியாரோடு எச். நெல்லையா, ஈஸ்வர ஐயர் போன்றோரும் 1960 களின் பின் டி.பி.கேசவன், கிருஷ்ணமூர்த்தி, ஹரோல்ட் பீரிஸ், எம்.ஜி.வென்சஸ்லாஸ் போன்றோரும் பெரும் சேவையாற்றினர். இன்றைய காலக்கட்டத்தில் குமார் நடேசன் முகாமைத்துவப் பணிப்பாளராக பெரும் சேவை புரிந்துவருகின்றார்.
பத்திரிகை பிரதம ஆசிரியர்களாக கே.பி. ஹரன், கே.வி. எஸ்.வாஸ், கே.சிவப்பிரகாசம், சிவனேசச்செல்வன், எஸ்.நடராஜா ஆகியோர் பணிபுரிந்து வழிகாட்டியிருக்கிறார்கள். ஈ.வி.டேவிட் ராஜூ, எம்.எஸ்.எம்.கார்மேகம், இராஜகோபால் ஆகியோரின் பணியும் இங்கு நினைவுகூரத்தக்கது.
காலத்துக்கு காலம் வேலைநிறுத்தம் உட்பட நெருக்கடிகளை வீரகேசரி எதிர்நோக்கிய போதும் முகாமையாளர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பினால் வீரகேசரி மக்கள் மனதில் அழியாத இடத்தைப் பெற்றது. மிகுந்த செல்வாக்குடன் அதன் பணி மேலும் முன்னோக்கிச் செல்கின்றது.
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் என்ற கம்பனிப் பெயருடன் நிறைவான சேவையை தினசரியாகவும் ஞாயிறு வாரவெளியீட்டின் மூலமாகவும் மக்களுக்கு வழங்கி அருமையான தோழனாய் பிரகாசிக்கும் வீரகேசரி, 1990 களில் தகவல் நவீன தொழில்நுட்பத்துக்குள் பிரவேசித்தமை மேலும் பல படிகள் முன்னேற வழிவகுத்தது. இந்த நவீன வசதிகளைப் பயன்படுத்தி வீரகேசரி ஸ்தாபனம் பல பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றமை பெருமைக்குரியது.
“விடிந்தால் வீரகேசரி” என்று காத்திருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இத்தாபனம் மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சோதிட கேசரி, கலைக்கேசரி, சுட்டிகேசரி, ஜீனியஸ் என்பவற்றை பிரசுரித்து வழங்கி அவர்தம் ஆற்றலையும் வளர்த்து வருகின்றது.
தமிழ் பேசும் மக்களின் குரலாய் விளங்கும் வீரகேசரியின் பயணமும் மிக மிக நீண்டது. ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி பெருவிருட்சமாய் விளங்கும் வீரகேசரி மேலும் நூற்றாண்டுகள் காலம் நிலைத்து நிற்க தமிழ் பேசும் மக்கள் என்றும் துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM