கே .குமணன்                                                                             

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23 “9″ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 இஞ்சி உயரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதிகளவான இராணுவத்தினரின் பிரசன்னத்தோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி, முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் படி தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னி, பேராறு, கனகரத்தினபுரம், வசந்தபுரம், கெருடமடு, கற்சிலைமடு, மூன்றாம் கண்டம், மன்னாகண்டல்,ஐயன்கட்டு மூன்றாம் கண்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.