அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பாக மக்கள் வங்கி பின்வருவனவற்றை பதிவு செய்ய விரும்புகிறது:

மக்கள் வங்கி அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்ற வகையில் மற்றும் இலங்கையில் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தினையும் கிளை வலையமைப்பினையும் கொண்டுள்ள ஒரு வங்கியாக திகழ்கிறது. அத்தோடு ஒப்பற்ற, நிலையான தன்மையினையும் மற்றும் பாதுகாப்பினையும் கொண்டுள்ளது. 

ஆரம்பம் முதல் தமது நடவடிக்கைகளில் பேணப்பட்டு வந்த வங்கியின் வலுவான நிலைத்தன்மையின் விளைவாகவும் உயர் நிபுணத்துவம் காரணமாகவும் மக்கள் வங்கி 900க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகளுடன் பரஸ்பர அனுகூலங்களை அனுபவித்திடும் வங்கியியல் உறவுகளைப் பேணி வருகிறது. இந்த நெருக்கமான வங்கியியல் உறவுகளின் விளைவாகவும் வங்கிக்குள்ள நேர்மறையான சர்வதேச நன்மதிப்பின் காரணமாகவும் எந்தவொரு மூன்றாம் தரப்பின் தலையீடும் இன்றி குறிப்பிட்ட வெளிநாட்டு தரப்பினருக்கு நேரடியாக கடன் வசதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்திடக் கூடிய ஒரு போட்டித்தன்மைமிக்க நிலையில் மக்கள் வங்கி இருக்கின்றது. இது மிகக்குறைந்த செலவுகளையும், எவ்விதமான ஊழலுக்கும் இடமளிக்காது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

வங்கியின் சிறப்புமிக்க 60 ஆண்டு கால பாரம்பரியத்தினைத் தொடர்ந்து மக்கள் வங்கி நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளது. இது மிக உயர்ந்த தொழில் நிபுணத்துவத்தினை நிலைநிறுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தினையும் முன்னெடுத்துச் செல்கிறது.