'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான தமிழ் ரசிகர்களை கவர்ந்த தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸ், நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படமான 'சலார்' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

'கே ஜி எஃப் சாப்டர் ஒன்' படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.  அவரது இயக்கத்தில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2 ' படத்தின் டீஸர்  அண்மையில் வெளியாகி உலக அளவில் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சலார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் 'பாகுபலி' பட புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் இப்படத்தின் பணிகள் மாட்டு பொங்கல் தினமான ஜனவரி 15ஆம் திகதியன்று ஹைதராபாத்தில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது.

இதில் சிறப்பு அதிதியாக 'கே ஜி எஃப்' படத்தின் மூலம் இந்திய அளவில் நடிகராக உயர்ந்த நடிகர் யஷ் பங்குபற்றினார். இந்த படத்தை கே ஜி எஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் கிரஹன்துர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.