(எம்.எப்.எம்.பஸீர்)

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஈ.ரி.ஐ.  நிதி நிறுவனத்தின்  நான்கு பணிப்பாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் இதற்கான உத்தரவை வழங்கினார்.

அதன்படி ஈ.ரி..ஐ. நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி தீபா எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் தலா 10 இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடிவிக்கப்ப்ட்டுள்ளனர்.  

வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்த நீதிமன்றம் சந்தேக நபர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு தினம் சி.ஐ.டி.யில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

 குறித்த 4 பேருக்கும்  பிணையளிக்க சட்ட மா அதிபர் எதிர்ப்பு வெளியிட்ட போதும், பிணையை மறுக்க எந்த சான்றுகளையும் சட்ட மா அதிபர் தரப்பு முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டி நீதிவான் பிணையளித்தார்.

ரீ.ஐ. மற்றும் ஸ்வர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு  கடந்த 5 ஆம் திகதி  பிற்பகல்  ஆலோசனை வழங்கியிருந்தார்.

13.7 மில்லியன் பணத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் , அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கேசரியிடம் தெரிவித்தார்.

ஈ.ரி.ஐ. விவகாரம் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு  இணங்க இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன  மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஸ்வர்ண மஹால் நகையகத்தின் பணிப்பாளருக்கு எதிராக சட்ட மா அதிபரினால்  மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஈ.ரி.ஐ.  நிதி நிறுவனம் 6,480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியுள்ளதுடன், ஸ்வர்ணமஹால் நகையகம் மத்திய வங்கியின் ஒப்புதல் மற்றும் பதிவின்றி 7.2 பில்லியன் பண வைப்புகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 இந் நிலையிலேயே கடந்த 5 ஆம் திகதி ஸ்வர்ணமஹால் நகையகம் ஊடாக இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில்  கடந்த 5 ஆம் திகதி குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு 6 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 இந் நிலையிலேயே தற்போது ஈ.ரி.ஐ.  நிதி நிறுவனம் 6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறபப்டும் விவகாரத்தில், கறுப்பு பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மீளவும் குறித்த நான்கு பணிப்பாளர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே அது தொடர்பிலும் தற்போது அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.