(லியோ நிரோஷ தர்ஷன்)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விஞ்ஞானிகள் உள்ளடங்கிய அனைத்துலக சிறப்பு ஆய்வு குழு சீனாவின் வுஹான் நகரிக்கு சென்றுள்ளது. கொவிட்-19 வைரஸ் குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வைரஸ் எவ்வாறு உருவெடுத்தது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான வைரஸ் தொற்றுக்கள் ஏற்படும் போது அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற விடயதானங்களின் அடிப்படையில் சீன விஞ்ஞானிகளுடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறப்பு குழுவினரும் விசேட ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறப்பு குழுவினர் செயற்பட உள்ளதுடன் முதல் 14 நாட்கள் மெய் நிகர் கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளனர்.

ஆரம்பத்தில் சீனா இவ்வாறானதொரு சர்வதேச விசாரணை குழுவை மறுத்திருந்த போதிலும் உலகளாவிய ரீதியில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு சீனாவே பொறுப்புக் கூற வேண்டும் என மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வேண்டுகோள் மற்றும் இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகள் ஊடாகவே சீன ஜனாதிபதி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 15 பேர் உள்ளடங்கிய சிறப்பு ஆய்வு குழுவினர் கடந்த வியாழக்கிழமை சீனாவின் வுஹான் நகரை சென்றடைந்தனர். இந்த குழுவில் வைரஸ் தொடர்பான சிறப்பு நிபுணர்கள் உள்ளடங்குவதுடன் அமெரிக்கா , அவுஸ்திரேலியா , ஜேர்மனி , ஜப்பான் , பிரித்தானியா , ரஷ்யா , நெதர்லாந்து கட்டார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் நிபுணர்களும் உள்ளடங்குகின்றனர். முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் காலப்பகுதியில் சீன தரப்புகளுடன் மெய் நிகர் கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.

கொவிட் - 19 குறித்து சீனாவிற்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பத்தில் டொனல்ட் ட்ரம் வலியுறுத்தினார். பின்னர் அவுஸ்திரேலியா  2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வலியுறுத்திய நிலையில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இறைச்சி மற்றும் வைன் உள்ளிட்ட பொருட்களை சீனா தடை செய்தது. இவ்வாறு பல தரப்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் அனைத்துலக சிறப்பு ஆய்வு குழுவை சீனாவிற்கு அனுப்பியுள்ளது.

இதுவரையில் உலகளாவிய ரீதியில் கொவிட் - 19 வைரஸினால் 93.1 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 1.99 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் முழு தொற்றாளர்களாக 50 ஆயிரத்து 899 பேர் பதிவாகியுள்ள போதிலும், 43 ஆயிரத்து 747 பேர் வைரஸ் தொற்று நீங்கிய நிலையில் வீடுகளுக்கு சென்றுள்ளனர். 251 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.