மோட்டார் போக்குவரத்து சட்டத்தை மீறி பிலியந்தலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கெடுத்தமைக்காக 12 மோட்டார் சைக்கிள் சாரதிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பிலியந்தலை பகுதியில் சட்டவிரோத மோட்டார் பந்தயம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்றிரவு குறித்த பகுதியில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களுக்கு சொந்தமான 12 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள் 18 - 26 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களை இன்று கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் எடுத்துள்ளனர்.

இதுபோன்ற சட்டவிரோத மோட்டார் பந்தயங்களைத் தடுக்க கடந்த சில வாரங்களாக, குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.