தலைநகர் பியோங்யாங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இராணுவ அணி வகுப்பின்போது வடகொரியா புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணைகளை காட்சிப் படுத்தியுள்ளது.

பியோங்யாங்கின் கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இராணுவ அணி வகுப்பினை கோட் மற்றும் ஃபர் தொப்பி அணிந்திருந்த வடகொரியத் தலைவர் கிம்யொங் உன் தனது கைகளை அசைத்த வன்னம் புன்னகைத்து பார்வையிடும் காட்சிகளையும் வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த அணிவகுப்பில் அணிவகுப்பு படையினரின் வரிசைகள் மற்றும் டாங்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பல இராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம், நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் ஒன்றன்பின் ஒன்றாக சதுக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இது புரட்சிகர ஆயுதப்படைகளின் வலிமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடகொரியாவின் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை நீருக்கடியில் இருந்து சோதனை செய்துள்ளது, மேலும் ஏவுகணைகளை எடுத்துச் செல்ல ஒரு செயல்பாட்டு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.