(இராஜதுரை ஹஷான்)

அமைதிக்கான ஆசிய பௌத்த சம்மேளனம் -13வது நிறைவேற்று கவுன்சில் கலந்துரையாடல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஸ்ரீ சம்போதி விஹாரையில் இடம்பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் ஒற்றுமையினை இலக்காகக் கொண்டு ரஷ்யா மற்றும் மொங்கோலிய நாட்டு பௌத்த தலைவர்கள் அனைத்து நாடுகளினதும் பௌத்த அமைப்புக்களின் தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன் பிரதிபலானக 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி மொங்கோலியாவின் ஹூலன்பட்டார் நகரத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் ஒன்று கூடிய பௌத்த தலைவர்கள் ஆசியாவின் அமைத்திக்கான சம்மேளனத்தின் முதல் கலந்துரையாடலை நடத்தினர்.இரண்டாவது கலந்துரையாடல் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. 

இன்றுவரையில் உலகளாவிய ரீதியில் உள்ள பௌத்த நாடுகள் இவ்வமைப்பில் உறுப்புரிமையினை பெற்றுக்கொண்டுள்ளன.

இந்நிலையில் 13ஆவது நிறைவேற்று கவுன்சிலின் சம்மேளனத்தை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

கொவிட்-19வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் இந்த சம்மேளனத்தை இலங்கையில் நடத்த அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இதனூடாக ஏனைய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்த முடியும் என பௌத்த சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 ஸூம் தொடர்பாடல் முறைமை ஊடாக இன்று இடம் பெற்ற இச்சம்மேளனத்தில் 25 நாடுகளைசேர்ந்த உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் சம்மேளனத்தின் நோக்கத்தை தெளிவுப்படுத்தினார்.

மல்வத்துபீடத்தின் அனுநாயக்க நியாங்கொட விஜித சிறிநாஹின்யோ தேரர் கொவிட்-19 வைரஸ்தாக்கத்துக்கு மத்தியில் பௌத்தர்களின் நடவடிக்கை என்ற தலைப்பில் ஆரம்ப உரை நிகழ்த்தினார்.பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ பிரதான உரையாற்றினார். இதன் போது மொங்கோலிய நாட்டு பிரதமர் ஹூக்ஹான் ஜின் குரேல்சுக் கானொளி ஊடாக உரையாற்றினார்.