கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஜப்பானிய அரசாங்கம் வியாழக்கிழமை முதல் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

அதன்படி இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்வதாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா புதன்கிழமை அறிவித்தார்.

கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க விதிக்கப்பட்ட டோக்கியோவுக்கான ஒரு மாத கால அவசரகால நிலை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அத்துடன் ஜப்பான் தனது எல்லைகளை ஜனவரி 14 முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை மூடியுள்ளதாகவும் சுகா மேலும் கூறினார்.

புதிய கட்டுப்பாடுகளில் தாய்வான், ஹாங்காங், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, வியட்நாம், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த 11 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வணிகப் பயணிகளுக்கு டிசம்பர் 28 முதல் ஜனவரி 31 வரை ஜப்பான் விதித்த நுழைவுத் தடையில் இருந்து விலக்கு பெற்றனர்.

இருப்பினும், ஜப்பானில் கொவிட்-19 பரவலின் மோசமான தன்மை மற்றும் புதிய வகை வைரஸ் தொற்று போன்றவை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளமையினால் இறுக்கமான எல்லைக் கட்டுப்பாடுகள் அவசியமாகிவிட்டதாக சுகா கூறினார்.