இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று காலை 10 மணிக்கு காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 37 ஆண்டுகால வரலாற்றில், இறுதியாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் (2011) நடைபெற்ற டெஸ்ட் தொடரொன்றில் இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக 2018 இல் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 0-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

2018 ஆம் ஆண்டு சுற்றுப் பயணத்திலும் தற்போதைய சுற்றுப் பயணத்திலும் பங்கெடுத்துள்ள இங்கிலாந்து அணி வீரர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போதைய நிலைமைகள் இலங்கை அணியினருக்கு சாதகமானதொன்றாக உள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்படாத பென் ஸ்டோக்ஸ், அடெல் ரஷீத், கீடன் ஜென்னிங்ஸ், மொயின் அலி மற்றும் பென் ஃபாக்ஸ் ஆகிய ஐந்து வீரர்கள் 2018 ஆம் ஆண்டு தொடரை முழுமையாக இங்கிலாந்து அணி கைப்பற்ற வழிவகுத்தனர்.

மேலும் இத் தொடருக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட மெய்ன் அலியும் கொவிட் தொற்று காரணமாக விலக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் டெஸ்ட் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு, இத் தொடரை வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு முன்னேற ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.

எனினும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் தோல்வி மற்றும் உபாதை காரணமாக ஏழு முக்கிய வீரர்களின் இழப்பு என்பன இலங்கை அணியை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

அதனால் இங்கிலாந்து அணி திட்டமிட்ட முறையில் போட்டிகளில் நுழைந்தது, தங்கள் வெற்றி ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போனஸ் புள்ளிகள் அட்டவணையில் முன்னேறும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இந்த தொடருக்கு இங்கிலாந்து அணி விருந்தினராக இருந்தாலும், அவர்கள் போட்டிக்கு சிறப்பாக தயாராக உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்கள் இலங்கை அணியை விட கடந்த சில நாட்களாக இலங்கை ஆடுகளங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். 

ஒரு பிரச்சனை என்னவென்றால் அணியின் சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளராக அணிக்கு அழைக்கப்பட்ட மொயின் அலி, கொவிட் தொற்று காரணமாக தொடரை இழந்தமை தான்.

இருப்பினும் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்  செய்தியாளர்களிடம் கூறுகையில், அணியின் ஜாக் லீச் மற்றும் டோம் பேஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக தங்கள் பங்களிப்பை செய்வார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இத் தொடருக்காக இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸுக்கு இதுவோர் சிறப்பு போட்டியாகும். இப் போட்டியில் மெத்தியூஸ் 19 ஓட்டங்களை பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் 6 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற ஐந்தாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூர்யா, மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்காரா ஆகியோர் இந்த பட்டியலில் முன்னதாக இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.