கிளர்ச்சியை தூண்டுவதற்கு வழிவகுத்தமைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க பிரநிதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

அவரது ஆதரவாளர்கள் ஒரு கும்பல் கடந்த வாரம் அமெரிக்காவின் கேபிடல் ஹில் கட்டிடத்திற்கு நுழைந்து வன்முறையை ஏற்படுத்த வழிவகுத்தமையினை மேற்கொள் காட்டியே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதி இரண்டு முறை குற்றச்சாட்டுக்கு ஆளானது இது முதல் சந்தர்ப்பமாகும்.

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வி அடைந்தார். 

இதற்கிடையே கடந்த 6 ஆந் திகதி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக காங்கிரஸ் கூடியது. அப்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் கட்டிடத்திற்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு ட்ரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து அவரை பதவியில் இருந்து 25 ஆவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் முயற்சித்தனர். 

ஆனால், ட்ரம்பை 25 ஆவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய உப ஜனாதிபதி மறுத்துவிட்டார். இதனால், ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர்.

அதன்படி இதற்காக பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் (232-197) ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்களிப்பில் ட்ரம்பின் 10 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சி உறுப்ப்னர்களுடன் இணைந்து பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

ட்ரம்பை குற்றஞ்சாட்ட வாக்களிப்பதில் பத்து குடியரசுக் கட்சியினர் 222 ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து, 2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை முறியடிக்கும் ஜனாதிபதியின் முயற்சிகளை இரு கட்சி கண்டிப்பாக மாற்றினர்.

தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

விசாரணையில் வன்முறை தூண்டியதற்கான குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும்.