(எம்.மனோசித்ரா)

இங்கிலாந்திலிருந்து நாட்டுக்கு வந்துள்ள பிரஜையொருவர் உருமாறிய புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உருமாறிய வைரஸால் இலங்கைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

COVID-19: A History of Coronavirus | Lab Manager

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினரால் உருமாறியுள்ள வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆய்விற்கமைய இது கண்டறியப்பட்டுள்ளதாகவும்  விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் இது குறித்து மேலும் தெளிவுபடுத்துகையில் ,

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினரால் இலங்கைக்குள் இனங்காணப்படும் வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருகிறது.

கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களிடம் காணப்படும் வைரஸின் வகை என்ன என்பது தொடர்பிலும் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. அவர்களிடம் தொற்று இனங்காணப்பட்டால் அந்த வைரஸ் எந்த வகையானது என்பதும் ஆராயப்படுகிறது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இங்கிலாந்திலிருந்து வந்த பிரஜைக்கு உருமாறிய புதிய வகை வைரஸ் தொற்று காணப்பட்டமை இனங்காணப்பட்டுள்ளது.

இது மிக முக்கியத்துமுடைய விடயமாகும். இதன் மூலம் புதிய வைரஸ் வகையின் ஊடான அபாயம் இலங்கையிலும் உருவாகியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

எனவே வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

ஏற்கனவே இனங்காணப்பட்ட வைரசினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கைக்கு சமமாக இந்த வைரஸால் பதிவாகக் கூடிய மரணங்களின் எண்ணிக்கை உயர்வடையாது. 

அவ்வாறிருந்த போதிலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்வடையக் கூடும்.

அவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தொற்று தீவிரமடையும் அளவும் அதனால் ஏற்படக் கூடிய மரணத்தின் அளவும் கூட அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதனை எமது சுகாதார துறையினால் கட்டுப்படுத்த முடியாமல் போகக் கூடும். இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான உயர்ந்த பட்ச முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். 

இதற்காக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேலும் கடுமைப்படுத்துவதோடு மிகச் சிறந்த முறையில் அதனை செயற்படுத்த வேண்டும் என்றார்.