(எம்.மனோசித்ரா)

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்சம் மக்களுக்கு இன்றைய தினம் மிக முக்கியதானதொரு நாளாகும். அறந்தலாவ பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமை , மங்களகம கிராமத்தில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடைய பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவில் முறைப்பாடு | Virakesari.lk

இதுவா 69 இலட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாரிய எதிர்பார்ப்புக்களுடன் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்சம் மக்களுக்க இன்று  முக்கியத்துவமுடையதொரு நாளாகும். அறந்தலாவ பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமை, மங்களகம கிராமத்தில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடைய பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். 

69 இலட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இதே சந்தர்ப்பத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்தி ரஞ்சன் ராமநாயக்க சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

தேசிய சொத்துக்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட மாட்டாது என்று உறுதியளித்து ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அனைத்து சொத்துக்களையும் அந்நியர்களுக்கு விற்று கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச மட்டத்தில் 23 ஆவது இடத்தில் காணப்படும் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டால் அது 15 அல்லது 16 ஆவது இடத்திற்கு முன்னேறக் கூடும்.

ஆனால் மிகக் குறைந்த வருமானத்திற்கு இந்திய நிறுவனத்திற்கு இதனை வழங்க முற்படுகின்றமை பொறுத்தமற்றது. இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பலரும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். 

எமது ஆட்சியின் போது குத்தகைக்கு வழங்கும் போது அதற்கு விற்க்கப்படுகிறது என்று பெயர் சூட்டினார்கள். ஆனால் தற்போது அதற்கு முதலீடு என்று பெயர் சூட்டுகிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் நாம் மக்களுடன் ஒன்றிணைந்து கிழக்கு முனையத்தை பாதுகாக்க தொடர்ந்தும் போராடுவோம்.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துச் செல்கின்ற அதே வேளை மறுபுறம் தொற்று தீவரமாகப் பரவலடையக் கூடும். மினுவாங்கொடை கொத்தணி உருவாகியதற்கான காரணமாக உக்ரேனிலிருந்து வந்த பிரஜைகள் என்று கூறப்பட்டது. 

ஆனால் தற்போது சலுகைகளுடன் அந்த நாட்டிலிருந்து நூற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வரவழைக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பதென்ன ? கொவிட் தொற்றால் தொழில் வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்காக அரசாங்கத்தில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்குவதாகக் கூறி அந்த மக்களையும் அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது.

இரு பக்கங்களைக் கொண்ட ஜனாதபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளார். அவரது இந்த செயற்பாடுகள் பற்றி நாம் சபாநாயகருக்கு தெளிவுபடுத்தவுள்ளோம். 

அரசியல்வாதியென்பவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். அரசியல் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்த பதவியை வகிப்பதற்கு பொறுப்பற்றவர்.

எவ்வித பலமும் இன்றி அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஷக்கள் தற்போது ஆசியாவில் முன்னணி தனவந்தர்களானது ஊழல் மோசடிகள் ஊடாகவே என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.