(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பது ஹரின் பெர்னாண்டோவின் உரைக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதிலூடாக தெளிவாகிறது.

எதிர்காலத்தில் உருவாகக் கூடிய சர்வாதிகார ஆட்சியின் ஆரம்பமாகவே இதனை பெருமளவானோர் கருதுகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் உரை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்த கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தின் போது இவ்விடயம் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஜனாதிபதியின் இந்த கருத்துக்களின் ஊடாக அவருக்கு வாக்களித்த மக்கள் உட்பட பெருமளவானோர் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவர் தெரிவித்த கருத்துக்களின் ஊடாக ஜனாதிபதியாக பதவியேற்ற போது அரசியலமைப்பினை ஏற்றுக் கொள்வதாக உறுதி பூண்டதையு;ம அவர் மீறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு அங்குள்ளவர்களாலேயே கருத்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஜனாதிபதியால் அந்த உரைக்கு பதில் கூறும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலானது பாராளுமன்ற அதிகாரம் மற்றும் வரப்பிரசாதத்தை மீறும் செயலாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்தோடு இது இலங்கையின் ஜனநாயகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதைப் போன்றதாகும். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பது தெளிவாகிறது. இதனை பெருமளவானோர் எதிர்காலத்தில் உருவாகக் கூடிய சர்வாதிகார ஆட்சியின் ஆரம்பமாகவே கருதுகிறார்கள்.