இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.

இன்று  பத்தரமுல்லை, கொழும்பு 15 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண்ணொருவரும், கொழும்பு  15 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண்ணொருவரும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடை பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இன்றுடன் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் அலை உருவானதன் பின்னரே இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இரண்டாம் அலையில் மேல் மாகாணமே அதிக ஆபத்துடையாக ஆரம்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது அதற்கு அப்பால் பல மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

அதனடிப்படையில் அபாயமுடைய பகுதியான மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்குச் செல்வர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

மேல் மாகாணத்திலிருந்து மலையகப்பகுதிகள் , வடக்கு மற்றும் கிழக்கு எந்த பகுதிகளுக்குச் செல்பவர்களும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக தற்போது தைப்பொங்கல் பண்டிகையின் காரணமாக நீண்ட விடுமுறைக் காலம் என்பதால் சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்பில் அவதானித்து அவர்களுக்கும் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை இதுவரை 692 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 50,229 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 43 267 பேர் குணமடைந்துள்ளதோடு 6715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 652 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 247 ஆக உயர்வடைந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுக்குள்ளானதினால் இருதய இரத்த ஓட்ட செயற்பாடு தடைப்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் நேற்று மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுக்குள்ளானமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.