(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கிங்ஸ்பரி மற்றும் ஷெங்ரில்லா ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தற்கொலைதாரிகளின் மனைவிமார் இருவர் உட்பட 9 பேரின் விளக்கமறியல் காலத்தை  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீதிமன்றம் நீடித்தது.

 கிங்ஸ்பரி ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல், ஷெங்ரில்லா ஹோட்டலில் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான இரு வேறு வழக்குகள் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிவான் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லையென்பதுடன், ஸ்கைப்  தொழில் நுட்பத்தினூடாக அவர்களை பார்வையிட்டு  நீதவான் உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு  அறிக்கையிடுமாறு  நீதவான் இதன்போது விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய மொஹம்மட் முபாரக் எனும் தற்கொலைதாரியின்  மனைவியான ஆய்ஷா சித்தீகா மொஹம்மட் வஸீம்,  அஹமது மொஹம்மது அர்ஷாத், அபூசாலி அபூபக்கர் ஆகியோர் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 ஷெங்ரில்லா குண்டுத் தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, அசார்தீன் மொஹம்மட் ஹில்மி, அப்துல் ஹமீத் மொஹம்மட் ரிபாஸ்,  மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் ரிழா, மொஹம்மட் அமீர் மொஹம்மது ஆயதுல்லாஹ்,  மொஹம்மட் முபாரக் மொஹம்மட் ரிபாயில் ஆகியோர் விளக்கமறியலில் உள்ளனர்.

 இவர்கள் 9 பேரின் விளக்கமறியல் காலமே இன்று நீடிக்கப்பட்டது. இதில் சஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்திமா ஹாதியா கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.