(எம்.மனோசித்ரா)
உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்களை எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தும் செயற்பாட்டில் விசேஷட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைக் கூறியிருக்கும் அவர், அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தைப்பொங்கல் பண்டிகையின் காரணமாக நீண்ட விடுமுறை கிடைப்பதால், அனைவரும் தத்தமது வீடுகளிலேயே அதனைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பண்டிகை விடுமுறையை முன்னிட்டு உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் தொடர்பில் அவதானித்து அவர்களுக்கு எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கொழும்பில் 11 இடங்களில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் குழுவொன்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பு சுகாதார அதிகாரிகளுடன் பயணித்த பேரூந்தொன்றில் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று நேற்றைய மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியோருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.