சர்வதேச விளையாட்டு அரங்கில் உயரியதும் உன்னதம்வாய்ந்த விளையாட்டு விழாவான 31 ஆவது ஒலிம்பிக் போட்டி இலங்கை நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (பிரேஸில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்குகிறது.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டி 21-ஆம் திகதி நிறைவடைகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் 34 மைதானங்களில் நடத்தப்படுகின்றன.

தொடக்க விழா

தென் அமெரிக்காவில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி என்ற சிறப்புடன் இன்று இரவு அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு ரியோ டி ஜெனீரோவில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்காணா மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இங்கு 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கலாம். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெறவுள்ள தொடக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்.

அதன்பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெறும். ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க, கடைசியாக போட்டியை நடத்தும் பிரேஸில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் செல்வார்கள்.

பிரேஸிலின் பிரபல பாப் பாடகர்களான அனிட்டா, கேட்டனோ வெலாஸ்கோ, கில்பெர்ட்டோ கில் ஆகியோர் தங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர். இதேபோல் பிரேசிலின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. தொடக்க விழாவில் 4800 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவின் இறுதியாக வானவேடிக்கைகள் ரியோ டி ஜெனீரோவை அதிர வைக்கவுள்ளது.