திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (13) காலை கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் முடிவுகளில் ஜின்னா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ஸ்ரீ விக்கிரமபுர பகுதியில் இருவது வயதுடைய தாய்க்கும் அவரது ஒரு வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து குறித்த தாயுடனும் மகனுடனும் தொடர்பை பேணிய 22 நபர்களில் 17 நபர்களுக்கு அன்டிஐன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லையென முடிவுகள் வந்ததை தொடர்ந்து ஐந்து நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 4 ஆம் திகதி சிறிமாபுர பிரதேசத்தில்  கொரோனா தொற்றுக்குள்ளான 53 வயதான பெண்மணியின் தங்கையின் மகளும் பேரனுமே தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயையும் மகனையும் பொருத்தமான கொரோனா மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் கிழக்கு மாகண சுகாதார பணிமனை மேற்கொள்கின்றது.