சதீஷ் கிருஷ்ணபிள்ளை  
கெப்பிட்டல் ஹில். அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் அமைந்துள்ள கட்டடம். அதனை அமெரிக்க ஜனநாயகத்தின் இருதயம் என்பார்கள். சுதந்திர உலகின் கலங்கரை விளக்கம் எனவும் கூறுவார்கள், உலகிற்கு ஜனநாயகம் போதிப்பவர்கள் அமெரிக்கர்கள். 

கடந்த ஆறாம் திகதி அத்தகைய அமெரிக்காவின் நிலை வேறு. கலகக்காரர்கள் உள்ளே நுழைந்தார்கள். பாதுகாப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். உறைகளில் இருந்து துப்பாக்கிகள் வெளியே எடுக்கப்பட்டன. உயிர்களும் பலியாகின.

மிகவும் வலுவானதாக தாம் நம்பும் ஜனநாயகத்தின் பிரத்தியேக தேர்தல் முறையின் மூலம் அமெரிக்கர்கள் ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட்டு ஆட்சி நடத்தி வருகிறார். அதேதேர்தல் முறையின் மூலம் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் வெற்றிக்கு முறையான அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க நினைத்ததால் வந்த விளைவு வன்முறை, அமைதி இன்மை.

தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். மாநில மட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு அமைய தேர்தல் கல்லூரி வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையையும், கீழவையான பிரதிநிதிகள் சபையையும் ஒன்றாகக் கூட்ட வேண்டும். அதில் வாக்குகளை எண்ணி, பைடனின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது அமெரிக்காவின் தேர்தல் சம்பிரதாயம். 

தேர்தலில் தோற்றவர், டொனால்ட் ட்ரம்ப். வாக்குகள் களவாடப்பட்டதாக அடுத்தடுத்து குற்றஞ்சாட்டினாலும், அது அவ்வாறு நிகழவில்லையென அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே ஏற்றுக்கொண்டாகிவிட்டது. முதல் நாள் கெப்பிட்டல் ஹில் கட்டடத்திற்கு முன்னால் மக்களைக் கூட்டினார். உணர்ச்சி ததும்ப பேசினார். கெப்பிட்டல் நோக்கி போகப் போகிறோம் என்றார். நாம் சளைக்கப் போவதில்லை, தோல்வியை ஏற்கப் போவதில்லையென சூளுரைத்தார்.


அடுத்த நாள் ஜனநாயகத்தின் இருதயத்தில் அசிங்கங்கள் அரங்கேறின. அவற்றை முழு உலகமும் பார்த்தது. அதிர்ஷ்டவசமாக தேர்தல் கல்லூரி வாக்குப்பெட்டிகள் காப்பாற்றப்பட்டன. அராஜகம் புரிந்தவர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஜோ பைடனினதும், கமலா ஹாரிஸினதும் வெற்றியை அங்கீகரித்தார்கள். 

எல்லாமுமே சுபம். ஜனநாயகத்தின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தைக் கடந்து விட்டோம். அடுத்த 20ஆம் திகதி அமெரிக்காவின் 59ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பார் என்று  அமெரிக்க தேசம் நம்பிக்கையுடன் கூறுகிறது. டொனால்ட் ட்ரம்பின் நான்கு வருடகால ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு மென்மேலும் வலுவாக முன்னேறுவோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகம் வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது. அதன் ஆரம்பமே கெப்பிட்டல் ஹில் அராஜகங்கள் என்பது சர்வதேச சமூகத்தின் பொது அபிப்பிராயம். எனினும், விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றது அமெரிக்க தேசம். தலைவர்கள் வார்த்தை ஜாலம் காட்டினார்கள். 

மக்களால் தெரிவு செய்யப்பட்டவரின் தேர்தல் வெற்றியை வன்முறையால் அபகரிப்பதற்குரிய முயற்சிகளை வர்ணித்தபோது, இது சதிப்புரட்சி என்ற வரைவிலக்கணக்கத்திற்குள் வராது என்றார்கள். இது கலகம் என்று கூறினார்கள். இதுவே வேறு நாடுகளில் நடந்திருந்தால், சிலவேளை பயங்கரவாதமாகக் கூட சித்திரிக்கப்பட்டிருக்கும்.

ட்ரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய அராஜகத்தால், தேர்தல் பெறுபேறுகளுக்கு எதுவும் நடக்கவில்லை என்ற வாதமும் முக்கியமானது. தேர்தல் கல்லூரி வாக்குகளை நிராரிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் வற்புறுத்தினார். அதனை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஏற்கவில்லையே என்று அமெரிக்க தேசம் வாதிடுகிறது. வாக்குகளை அத்தாட்சிப்படுத்த வேண்டிய கூட்டு அமர்விற்கு தலைமை தாங்கியவர், குடியரசுக் கட்சியை சேர்ந்த மைக் பென்ஸ். அவர் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்ததால் அமெரிக்க ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டது என்று வாதிடுகிறார்கள்.

இந்தச் சம்பவத்தை அவ்வளவு இலகுவாகக் கடந்து போக முடியாது. அரசியல் யாப்பிற்கு அமைவாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியை தமது வன்முறைகளால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ஆட்சியிலுள்ள ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கிய மாபெரும் குற்றம். 

அத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மக்களவையில் வாக்குப் பெட்டிகளை மறைத்து வைக்க வேண்டிய நிலையை ஆரோக்கியமான ஜனநாயகம் எனக்கூற முடியாது. அப்படிச் சொன்னால், அது அப்பட்டமான பொய்.

மூக்குடைப்பட்ட ட்ரம்ப், பின்னர் காணொளிச் செய்தியின் மூலம் கெப்பிட்டல் வன்முறைகளைக் கண்டித்தது என்னவோ உண்மை தான். எனினும், கலகக்காரர்கள் உள்ளே இருந்த சமயம், அவர்களை ஆதரித்து டுவிட்டரில் பதிவு இட்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களை தாம் நேசிப்பதாகவும், அவர்களின் வலியை உணருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். 

இதனை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலேனும் நியாயப்படுத்த முடியாது. ஒரு ஜனநாயக தேசத்தின் ஜனாதிபதியொருவர் செய்யக்கூடிய காரியம் இதுவல்ல. இது ‘தனிமனிதனின் புத்திசுவாதீனம்’ என்று கூறி அமெரிக்க தேசம் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில், இந்தத் தனிமனிதன் அமெரிக்கர்கள் மிகவும் ஜனநாயகமானது எனக் கருதும் தேர்தல் முறையின் ஊடாகத் தெரிவானவர். சுருக்கமாகச் சொன்னால், ஜனநாயகத் தொழிற்சாலையின் தவறான உற்பத்தி. 

அமெரிக்க தேசம் ஜனநாயகம் பற்றி இனிமேல் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது. மற்றைய நாடுகளுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்கவும் முடியாது. கெப்பிட்டல் ஹில் அராஜகத்தின் பாதிப்பு அமெரிக்காவிற்கு மாத்திரமல்ல. ஒட்டுமொத்த மேற்குலகிற்கும் தான். மேற்குலகின் ஜனநாயகத்தைப் பாருங்கள் என்று சீனா கேலி செய்யத் தொடங்கி விட்டது. அமெரிக்காவின் ஜனநாயகம் கேலிக்கூத்து என்ற குற்றச்சாட்டில், ஜனநாயகம் என்ற கோட்பாடு மீதும் விரல் நீட்டப்படுகிறது. இதுவும் உலகப் பொது நலனுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.

அமெரிக்க தேசம் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். அதற்குரிய பொறுப்பு மக்களவையிடமும், அடுத்து ஆட்சிபீடமேறும் தலைவர்களிடமும் இருக்கிறது. மக்களவையான காங்கிரஸின் பொறுப்பு, டொனல்ட் ட்ரம்ப்பைத் தண்டிப்பது தான். அவர் பதவியில் இருக்கப் போவது சில நாட்களே என்றாலும், அதற்குள் பதவி நீக்கம் செய்வது சிறந்த தண்டனையாக அமையும். 

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஓரளவு கட்டியெழுப்ப உதவும். அரசியல் குற்றவியல் பிரேரணையின் மூலம் அல்லது அரசியல்யாப்பின் மீதான 25ஆவது திருத்தத்தின் மூலம் பதவி நீக்கலாம். முன்னைய நடைமுறை சற்று நீளமானது. இதனை இரு வாரங்களுக்குள் நிறைவேற்றுதல் கடினம். இரண்டாவது நடைமுறை இலகுவானது. துணை ஜனாதிபதி பென்ஸ் அடங்கலாக அமைச்சரவையில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடிந்தால், ட்ரம்பை பதவிநீக்கம் செய்யலாம். 

எஞ்சிய நாட்களில பென்ஸ் ஜனாதிபதியாக இருப்பார். 25ஆவது திருத்தத்தை அமுலாக்குமாறு ஜனநாயக கட்சியின் அங்கத்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், குடியரசுக் கட்சியின் தரப்பில் இருந்து எவரும் ஆதரவளித்ததாகத் தெரியவில்லை.

இரு வாரங்களுக்குள் முடியாவிட்டால் அதற்குப் பின்னராவது அரசியல் குற்றவியல் பிரேரணையை சமர்ப்பித்து, ட்ரம்ப் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள் தீவிரம் பெற்றுள்ளன. இதன்மூலம், ட்ரம்ப் மீண்டுமொரு தடவை தேர்தலில போட்டியிடக்கூடிய வாய்ப்பை இல்லாமல் செய்யலாம். 

எனினும், முன்னாள் ஜனாதிபதி மீது அரசியல் குற்றவியல் பிரேரணை தாக்கல் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. இதனை நீதிமன்றங்கள் தெளிவாகக் கூறவும் இல்லை. தற்போதைக்கு இப்படித்தான் இருக்கிறது அமெரிக்காவின் ஜனநாயகம்.