இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸாமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கீழ் அஸ்ஸாம் பகுதியில் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாலாஜார் பகுதியில், மக்கள் கூட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் தேசிய போடோலேண்ட் முன்னணி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் 14 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டதில் தீவிரவாதி ஒருவர் சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 அஸ்ஸாம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள்  அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.