(நேர்காணல்:-ஆர்.ராம்)

“ரஷ்ய சுற்றுலாப்பயணிகளின் கோட்பாதர் நானே’ 

கிழக்கு மாகாணதினை நோக்கி விரைவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவிக்கப்படுவர்”

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கான சுகாதார விதிகளில் நெகிழ்ச்சித்தன்மை அவசியம் என்பதோடு சுற்றுலாப்பயணிகள் முன்னோடித் திட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் முன்னாள் ரஷ்யாவுக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை சுமந்துகொண்டிருக்கும் தாங்கள் திடீரென்று இலங்கையின் சுற்றுலாத்துறைமீது கரிசனை கொண்டிருக்கின்றீர்களே?

பதில்:- கொரோனா பரவலால் நாட்டின் சுற்றுலாத்துறையும் அதனால் பொருளாதாரமும் எந்த நிலைமையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்தநிலையில், ரஷ்யா ஊடகமொன்றில் வெளிவந்த கட்டுரையொன்றைப் பார்த்தேன். அதில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 19நாட்களில் துருக்கியின் அந்தாலே கடற்கரைப்பகுதிக்கு ஒருமில்லியன் வரையிலான சுற்றுலாப்பயணிகள் 31நாடுகளிலிருந்து சென்றுள்ளனர். அதில் உக்ரைன், ரஷ்யா ஜேர்மன் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

மேற்படி 31நாடுகளில் சோவியத் பிராந்தியத்தில் அங்கம் வகித்திருந்த நாடுகளில் இருந்து 60சதவீதமானவர்கள் பங்கேற்றிருந்தார்கள். அந்த நாடுகளுடன் எனக்கு இலகுவாக தொடர்புகளை மேற்கொள்ள முடியும் நிலைமைகள் இருக்கின்றன. 

ஆகவே, எமது நாட்டின் கடற்கரைகளை மையப்படுத்தி அங்கிருந்து சுற்றுலாப்பயணிகளை வரவழைக்க முடியும் என்று கருதினேன். கொரோனா நெருக்கடி காலத்தில் துருக்கி எவ்வாறு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளித்தது, அதற்கான பொறிமுறை என்னவென்று ஆராய்ந்தேன். 

அவர்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை குழுக்களாக வருவித்து இறுவரையில் அவர்களை குழுக்களாகவே கையாண்டு அனுப்பிவைத்திருக்கின்றார்கள் (Tourist bubble) என்ற புரிதல் ஏற்பட்டது. அதனை எமது நாட்டிலும் முயற்சி செய்து பார்ப்பதற்கு நடவடிக்கைளை எடுத்திருந்தேன்.

கேள்வி:- நீங்கள் இந்த முயற்சித்திட்டத்தினை அமுலாக்குவதற்கு என்ன நடவடிக்கையை முதலில் எடுத்தீர்கள்?

பதில்:- நான் இந்தத் திட்டத்தினை முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலேயே தெரிவித்திருந்தேன். அவர் அதற்கு மிகுந்த நம்பிக்கையுடன் அனுமதி அளித்தார். 

கேள்வி: ராஜபக்ஷவினரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்ற அடிப்படையிலா உங்கள் முயற்சிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

பதில்:- அவ்வாறு இல்லை, முறையாகவே அனுமதி பெறப்பட்டது. அமைச்சரவை கூட அனுமதி அளித்துள்ளது.

கேள்வி:- அதனை விபரித்துக் கூற முடியுமா?

பதில்:- இந்த திட்டத்தினை நான் எழுத்துமூலமாக விபரித்ததன் பின்னர் செப்டம்பர் 16ஆம் திகதி அமைச்சரவையில் இத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 19இல் மேலும் சில ஆவணங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டன. 

செப்டம்பர் 28இல் அமைச்சரவை அனுமதி கிடைத்தது. பின்னர் ஒக்டோபர் முதலாம் திகதி ஜனாதிபதி, பசில் ராஜபக்ஷ தலைமையில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான குழுவொன்றை நியமித்திருந்தார். அக்குழுவிடத்திலும் இந்த திட்டம் விபரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. 

அதன்போது தான் இரண்டாவது தடவையாக இலங்கையில் கொரோனா பரவல் ஏற்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அமைச்சரவையின் சுற்றுலாத்துறை முன்னோடித்திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருந்தது. அதனடிப்படையிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கேள்வி:- நீங்கள் ஆரம்பத்தில் ரஷ்யாவில் இருந்தல்லவா சுற்றுலாப்பயணிகளை கொண்டுவருவதாக கூறினீர்கள்?

பதில்:- எனக்கு இந்த நாட்டிலிருந்து வெளியேற முடியாது தடைபோடப்பட்டுள்ளது. நான் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ரஷ்யா தூதுவராகவும் செயற்பட்டிருக்கின்றேன். தற்போது பதவியிருந்து நீங்கி ஐந்து வருட இடைவெளியும் காணப்படுகின்றது. 

இருப்பினும், ரஷ்யா உட்பட சோவியத் ஒன்றிய பிராந்திய நாடுகளுடன் எனக்கு காணப்பட்ட தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் அனைத்துப்பேச்சுக்களையும் தொலைபேசி ஊடாகவே முன்னெடுத்திருந்தேன். அதனடிப்படையில் டிசம்பர் 26இலிருந்து வாரத்திற்கு மூன்று விமானங்கள் வீதம் 16விமானங்கள் இலங்கைக்கு வருவிப்பதற்கு இணக்கமும் ஏற்பட்டிருந்தது.

கேள்வி:- ஆனால் உக்ரைனில் இருந்தல்லவா சுற்றுலாப்பயணிகள் வந்திருக்கின்றார்கள்?

பதில்:- அதற்கு எம்மவர்களே காரணம், ராஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் எமது நாட்டின் கொரோனா பாதுகாப்பு வதிமுறைகளை அந்நாட்டு மொழியில் மொழிபெயர்த்து அங்குள்ள சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. 

அவர்கள் பாதுகாப்பு விதிகளை பார்த்தவுடன் சுற்றுலா முகவரகங்களுக்கு அதனை வழங்க அச்சப்பட்டார்கள். வெளிநாட்டிலிருந்து பணத்தினை செலவழித்து இலங்கைக்கு வந்து 14நாட்கள் அறையொன்றில் முடங்கியிருப்பதற்கும் ஐந்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளை செய்வதற்கும் யாராவது விரும்புவார்களா? அதனால் மொஸ்கோவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் முயற்சி கைவிடப்பட்டது. 

இப்போது உக்ரைனிலிருந்து 12 விமானங்களில் சுற்றுலாப்பயணிகள் கொண்டுவரப்படவுள்ளனர். தற்போதுவரையில் 6 விமானங்கள் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ன. அதிலும், மத்தள விமான நிலையத்திற்கு வெளிநாடொன்றின் விமானங்கள் தொடர்ச்சியாக வருகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி:- கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியிருந்த உக்ரைனில் இருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவதானது ஆபத்தானது என்பதை நீங்கள் உணரவில்லையா?

பதில்:- கொரோனாவை காரணம் காட்டிவிட்டு நாம் அனைத்துச் செயற்பாடுகளையும் கிடப்பில் போடமுடியாது. அந்தச் சவாலை எதிர்கொண்டு அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டும். மேலும் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட குழுக்களாகவே வருவிக்கப்படுகின்றார்கள். அவ்வாறே தங்கவைக்கப்படுகின்றார்கள். அவர்கள் நடமாடும் பகுதியும் சுற்றுலாத்தளங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உள்நாட்டவர்களுடன் தொடர்புகள் ஏற்படச் சந்தர்ப்பங்களே இல்லை. ஆகவே அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. 

பி.சி.ஆர் சோதனைகளில் சில தொழிநுட்ப குழப்பங்கள் உள்ளன. இதுவரையில் வருவிக்கப்பட்ட 800வரையிலான சுற்றுலாப்பயணிகளில் நால்வருக்கே தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. 

கேள்வி:- விடயதானத்திற்கு பொறுப்பாகவுள்ள இலங்கை சுற்றுலாச் சபைத்தலைவருக்கு தெரியாது நீங்கள் முன்னோடித்திட்டத்தினை செயற்படுத்துகின்றீர்களே?

பதில்:- பசில்ராஜபக்ஷ தலைமையிலான குழுவில் அவரும் உள்ளார். அந்தக்குழு இந்த முன்னோடித்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அப்படியிருக்கையில் அவர் எவ்வாறு தனக்குத் தெரியாது என்று கூற முடியும். 

ஆனால் சுற்றுலாச் சபைத் தலைவரின் அறிவுரைக்கு அமைவாக மொஸ்லோவில் உள்ள தூதரகம் செயற்பட்டதனாலேயே ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரமுடியாத நிலைமையொன்று தற்போது ஏற்பட்டிருக்கின்றது. 

கேள்வி:- ஆனால் அவர் உங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு நீங்கள் அலரிமாளிகை முகவரியைப் பயன்படுத்துவதாக கூறியுள்ளரே?

பதில்:- சுற்றுலாத்துறை விடயத்தினை கடந்து நான் ஏனையவிடயங்கள் பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. தனிமனித சுபாவத்தின் வெளிப்பாடு என்று மட்டும் கூறமுடியும். மேலும், அலரிமாளிகையை நான் முகவரியாக பயன்படுத்துவதாக இருந்தால் இவரைத்தவிர வேறு யாரும் ஏன் எனக்கான கடிதங்களை அங்கு அனுப்பவில்லை. 

கேள்வி:- சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த திட்டத்தினை விரும்பவில்லையே?

பதில்:- அமைச்சரவையில் அவரும் இணங்கியதாலேயே அனுமதி கிடைத்திருந்தது.

கேள்வி:- நெருக்கடியான சூழலில் கூட நீங்கள் இலாபமீட்டுவதற்காக இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- பலவிதமான கருத்துக்களை கூறுவார்கள். மிக விவகாரத்தில் கோடிக்கணக்கான பணத்தை கையகப்படுத்தியதாக கூறினார்கள். இப்போது வருமானம் ஈட்ட விளைவதாக கூறுகின்றார்கள். 

உண்மையில் எனக்கு சுற்றுலாத்துறை தொடர்பில் 1997இல் இருந்து ஈடுபாடும் அனுபவமும் உள்ளது. அத்துடன் நாட்டினதும், சுற்றுலாத்துறையினதும் நிலைமைகளை உணர்ந்தே இந்த செயற்பாட்டை கையிலெடுத்தேன். மேலும் 2005ஆம் ஆண்டு நான் ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்டபோது ஆண்டொன்றுக்கு 456 சுற்றுலாப்பயணிகளே இலங்கைக்கு வந்தனர். பின்னர் இந்தத்தொகை ஆண்டொன்றுக்கு 86ஆயிரமானது. 

இதற்காக நான் கடுமையாக உழைத்திருக்கின்றேன். பலமட்டங்களில் உறவுகளை ஏற்படுத்தியிருக்கின்றேன். ரஷ்யா உட்பட சோவியத் பிராந்திய சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாட்டின் ‘கோட் பாதர்’ நானே. அந்த அடிப்படையில் தான் இந்த முயற்சிகளை எடுத்துள்ளேன். என்மீதான தனிப்படை நம்பிக்கையிலேயே இத்தனை சுற்றுலாப்பயணிகளையும் அந்நாடு அனுப்பி வைத்திருகின்றது.

இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்தின் பாசிக்குடா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருவிக்கப்படுவர்.