இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றையதினம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் இறுதியாக கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 4 7 வயதுடைய ஆணொருவரும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக இறந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 49 000 ஐ கடந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 588 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 49 537 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 42 621 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6672 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 244 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 793 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் பேலியகொட பொலிஸ் பிரிவு , கங்கபட கிராம சேவகர் பிரிவில் 90 ஆவது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.