(எம்.எப்.எம்.பஸீர்)

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ ஆப்றூ தலைமையிலான நீதியரசர்களான விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான  நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என   வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு  கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கும் தீர்ப்பை நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் சிசிர டி ஆப்றூ திறந்த மன்றில் வாசித்தார். 

அரசியலமைப்பின் 105 (3) ஆம் உறுப்புரைக்கு அமைய  இந்த 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்குவதாக  நீதியர்சர் சிசிர டி ஆப்று 20 பக்கங்களைக் கொண்ட குறித்த தீர்ப்பை வாசித்து அறிவித்தார்.

அதன்படி உடனடியாக கைது உத்தர்வை பிறப்பிக்க உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதியரசர்கள் குழாம் உத்தர்விட்ட நிலையில்,  அதனடிப்படையிலேயே ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்துக்குள் வைத்தே சிறை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

சிறைச்சாலையில், அவருக்கு தண்டனை கைதிகளுக்கு வழங்கபப்டும்  வெள்ளை ஆடை வழங்கி, அணிவிக்கப்பட்டு அங்கிருந்து நீர் கொழும்பு - பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SC Rule No. 1/ 2018 எனும் இந்த வழக்கில்,  ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தரான நுகேகொடையைச் சேர்ந்த ரணவக்க சுனில் பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்ட மா அதிபரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிரதிவாதியாக ரஞ்சன் ராமநாயக்க மட்டும் பெயரிடப்பட்டிருந்த நிலையில்,  அவர் சார்பில்  இவ்வழக்கில்  டி. விதானபத்திரணவின் ஆலோசனைக்கு அமைய,  சிரேஷ்ட சட்டத்தரனிகளான விரான் கொரயா, ஜே.சி. தம்பையா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜரானார்.

 முறைப்பாட்டாளர்  ரணவக்க சுனில் பெரேரா சார்பில்,  சட்டத்தரனி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய   சட்டத்தரனி சந்துன் சேனாதிபதியுடன் சிரேஷ்ட சட்டத்தரனி  ரசிக திசாநாயக்க ஆஜரானார்.

இந் நிலையில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் இவ்வழக்கில் சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்துடன்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன பிரசன்னமானார்.

 இந் நிலையில் இவ்வழக்கின் வாதங்கள்,  2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி, 2019 ஜனவரி 28, 30 ஆம் திகதிகள்,  2019 ஜூலை 30 ஆம் திகதி, 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி, 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி, 2019 செப்டம்பர் 10 ஆம் திகதி,  2020 ஜூலை 6 ஆம் திகதி,  2020 ஜூலை 16 ஆம் திகதி, 2020 ஆகஸ்ட் 24 ஆம் திகதி மற்றும் 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந் நிலையிலேயே இன்றைய தினம் குறித்த நீதிமன்ற வழக்கின் தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வழங்கியது.

குறித்த தீர்ப்பில், வேண்டுமென்றே ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதிக்கும்  கருத்துகளை வெளியிட்டுள்ளமை, நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறும் போது தெரிவித்த கருத்துகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதியரசர் சிசிர டி ஆப்ரூ தமது தீர்ப்பை அறிவிக்கும் போது தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான  நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என   வெளியிட்ட கருத்தின் போது, நீதிபதிகள் எனும் சொற்பதம் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிவாதி சார்பில்  வழக்கு விசாரணைகளிடையே கூறப்பட்டாலும், ஒவ்வொரு விசாரணை  நாட்களின் போதும் விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதிவாதி,  குறித்த கருத்தினை வேண்டுமென்றே தெரிவித்துள்ளமையை உறுதி செய்யும் வகையில்  செயற்பட்டுள்ளதாக  நீதியரசர் குழாமின் தலைவர் சிசிர டி ஆப்ரூ தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.  

தான் வெளியிட்ட கருத்துக்களை மீளப் பெறவோ அல்லது அது தொடர்பில் மன்னிப்பு கேட்கவோ போவதில்லை எனவும் அக்கருத்துக்களிலேயே தான் தற்போதும் உள்ளதாக, விசாரணைகளின் பின்னரான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  பிரதிவாதி ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், வீடியோ ஆதாரங்கள் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதியர்சர் சிசிர டி ஆப்றூ, அதன் அடிப்படையில் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றம் குற்றவாளியாக காண்பதாக அறிவித்தார்.

 அத்துடன், குறித்த வழக்கை விசாரணை செய்ய  நீதிமன்றுக்கு அதிகாரமில்லை என்று ரஞ்சன் ராமநாயக்க சார்பில் வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வாதத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்தே, குற்றாவாளியாக காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்காண்டு கடூழிய சிறைத் தண்டனை வித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.