வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து செல்கின்றமையை கருத்தில் கொண்டு மதுபான நிலையங்களை உடனடியாக மூடுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வவுனியா நகரில்  கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து நகரப்பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன் அத்தியவசிய வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

எனினும் நகரை அண்டிய மரக்காரம்பளை, கூமாங்குளம், நெளுக்குளம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கிறன.

இதனால் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அது ஏனையோருக்கும் பரவும் அபாயநிலமை காணப்படுகின்றது.

இதேவேளை அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களே நகரில் மூடப்பட்டுள்ள நிலையில், மதுபான நிலையங்களை திறக்கவேண்டிய தேவை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள் நிலமையையின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை தற்காலிகமாகவேனும் மூடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.