(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ பரவலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என நம்பப்படும்  ஐந்து சந்தேகநபர்கள்  தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றக்கட்டடத் தொகுதியில் பரவிய தீ, மின்சாரக் கசிவினால் அல்லது எரிபொருள் விசிறப்பட்டதால்  ஏற்பட்டது அல்ல என அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை ஊடாக  உறுதியாகியுள்ள நிலையில்  இந்த ஐவர் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த தீ பரவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளும் தொடரும் நிலையில் இந்த 5 பேர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற கட்டடத்தில் சேதமடைந்த, அகற்றப்பட்ட பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.