(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 49 000 ஐ கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை 310 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 302 பேர் பேலியகொடை கொத்தணியுடனும் , எஞ்சிய 8 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்களாவர். 

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 49 259 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 42 621 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6398 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்று செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் பேலியகொட பொலிஸ் பிரிவு , கங்கபட கிராம சேவகர் பிரிவில் 90 ஆவது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

திங்களன்று பதிவான மரணங்கள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 52 வயதான ஆண் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் கடந்த 06 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில்கடந்த 07 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் கடும் நீரிழிவு நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் கடந்த 8 ஆம் திகதி மரணமானானர். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் வலிப்பு நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் ,அந்த வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் ,அந்த வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் கடும் சிறுநீரக நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ,தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 மற்றும் இரத்தம் நஞ்சானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் ,அந்த வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியாவுடன் இரத்தம் நஞ்சானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.