(இராஜதுரை ஹஷான்)

நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நிலக்கண்ணிவெடியகற்றும் மனிதநேய நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்வதற்கும், கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களுடன் 2023 ஆம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டிலிருந்து நிலக்கண்ணிவெடி அகற்றும் மனிதநேயப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளில் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இரண்டும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் இரண்டும் பங்கெடுக்கின்றன.

மேலும் இராணுவத்தினரின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் குறித்த பணிகளில் ஈடுபடுகின்றனர். 

நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளின் மேற்படி நிறுவனங்களைக் கண்காணித்தல், தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டு நிலையத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.

இதுவரை 197,66 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 1539 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அகற்றப்பட வேண்டியுள்ளது.

இச்செயன்முறை தொடர்பாக தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டு நிலையம், நிலக்கண்ணிவெடி அகற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், 2023 ஆம் ஆண்டிற்கான குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அதிகாரசபை அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.