(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வைத்திய ஆலோசனைக்கு அமைய அரச சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவர் சீரான உடல் நலத்துடன் பூரண மருத்துவ மேற்பார்வையில் உள்ளார் என ஜனநாயக இடதுசாரி முன்னணி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜனவரி 09 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக உடல் நலக்குறைவால் வைத்திய ஆலோசனைக்கு அமைய பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதில் அவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

வைத்திய ஆலோசனைக்கு அமைய அரச சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர், தற்போது சீரான உடல் நலத்துடன் பூரண மருத்துவ மேற்பார்வையில் உள்ளார். 

அத்துடன் கடந்த 6ஆம் திகதிக்கு பின்னர் அமைச்சரை சந்தித்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தனது சுகத்துக்காக  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் மஹா சங்கத்தினர், மத போதகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவரது கௌரவமான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.