(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் நிபுணர்களால் வழங்கப்பட்ட அறிக்கையை மறைத்து அரசாங்கம் தான் எடுத்த தீர்மானத்தையே செயற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

மஹிந்த தரப்புக்கு முஸ்லிம்களின் வாக்குகளும் கிடையாது பிரியாணியும் கிடையாது  - முஜிபுர் ரஹ்மான் | Virakesari.lk

இதனால் உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அவற்றை புறந்தள்ளியுள்ளது.

இதனால் சர்வதேச ரீதியிலும் இலங்கையிலுள்ள மக்கள் குறித்து கவலைபடக் கூடிய நிலைமையே காணப்படுகிறது.

மக்களுக்கு மாத்திரமின்றி நாட்டிலுள்ள நிபுணர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். காரணம் அவர்களால் வழங்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டு அரசாங்கம் அதன் அறிக்கையையே செயற்படுத்துகிறது. இவ்வாறான செயற்பாடுகள் எதிர்கால சந்ததிதியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போதைய அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து பின்னர் சில வருடங்களின் பின்னர் ஆட்சியிலிருந்து சென்றாலும் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது நீங்காத கரையே காணப்படும். 

இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.