-ஹரிகரன்

 "இலங்கையில் சிங்களத் தேசியவாதமும், சீனாவின் ஆதிக்கமும் அதிகரிப்பதை இந்தியா தனது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கின்றது'

 “தமிழர் தரப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டும், ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என ஆலோசனை கூறியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்புகளை நடத்திய அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனையோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையோ சந்திக்கவில்லை”

“இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணத்துக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் அவசரமாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்தமை டில்லியை உசாரடயச் செய்திருக்கிறது'


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தற்போதைய சூழலில் அவர், ஏன் இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டார்- என்பதில் தொடங்கி, அவரது சந்திப்புகள், பேசப்பட்ட விவகாரங்கள், வரை எல்லாமே, பல்வேறு கேள்விகள், விவாதங்களை உள்ளடக்கியவையாகத் தான் உள்ளன.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், சுமார் – ஒன்றரை மாதங்களுக்குள்ளாகவே இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணம் இடம்பெற்றிருக்கிறது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறுவதாக, இந்தப் பயணத்துக்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்புகளில் கூறப்பட்டிருந்தது.

அஜித்டோவலின் பயணத்தின் போதும், இதேவிதமாகத் தான்,  செய்தி வெளியிடப்பட்டது. 

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில் தான், அந்த பயணம் இடம்பெற்றதாக கூறப்பட்டது. தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழலில் உயர்மட்டப் பயணங்கள் தவிர்க்கப்படுகின்ற நிலையில், இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகளின் கொழும்பு பயணங்கள் அசாதாரணமானவையாகவே பார்க்கப்படுகின்றன.

இவ்வாறான கண்ணோட்டத்தை தவிர்க்கவே இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற பயணங்கள் போலவே காட்டிக் கொள்ளப்படுகின்றன. ஆனால், உண்மை அதுவா என்பது தான் சிக்கலானது.

இருதரப்பு பயணங்கள் அழைப்பின் பேரில் தான் இடம்பெற வேண்டும்- இது இராஜதந்திர மரபு. 

பல சந்தர்ப்பங்களில் அவ்வாறான அழைப்புகள் கேட்டுப் பெற்றுக் கொள்ளப்படுவதும் கூட, இராஜதந்திர அரங்கில் நடக்கின்ற நிகழ்வு தான். இலங்கையில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவுடனான நெருக்கம் அதிகரித்துள்ள சூழலிலும், சிங்களத் தேசியவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்ற சூழலிலும், தான் ஜெய்சங்கரின் பயணம் இடம்பெற்றிருக்கிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அச்சுறுத்தலாக பார்ப்பது போலவே, சிங்களத் தேசியவாதம் ஆதிக்கம் செலுத்துவதையும். இந்தியா தனக்கான அச்சுறுத்தலாக பார்க்கிறது.

இந்த இரண்டுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இந்தியா கருதுகிறது.

அண்மைக்காலங்களில், இந்தியா தொடர்பாகவும், இந்தியாவின் முயற்சியினால் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும், மாகாண சபைகள் தொடர்பாகவும் சிங்களத் தேசியவாதிகள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள், இந்தியாவை அதிருப்தி கொள்ள வைத்திருக்கின்றன.

இவ்வாறான சூழலில், இந்தப் பயணத்தின் போது, அரசாங்கத் தரப்பிடம் இந்த விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாகப் பேசியிருப்பதாக தெரிகிறது.

மேன்போக்காக பேசப்பட்ட சில விடயங்கள் குறித்த தகவல்களே பொது அரங்கில் பரிமாறப்பட்டிருக்கின்றன.

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப்பட வேண்டியது தொடர்பாகவும், 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முன்வைத்த கருத்து புதிதான ஒன்று அல்ல.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய தலைவர்களும், அதிகாரிகளும் இதனையே கூறி வருகிறார்கள். 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்ற நிலையில், இந்தக் கருத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியிருப்பது தான், பெருமளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

13 ஆவது திருத்தம், தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுதல் தொடர்பாக ஜெய்சங்கர் முன்வைத்த கருத்துக்களைத் தான், இந்திய ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்தியாவின் கரிசனைக்குரிய விவகாரங்களான, சீனாவின் தலையீடுகள் பற்றியோ, கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் பற்றியோ இந்திய வெளிவிவகார அமைச்சர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் இதுபற்றிப் பேசப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ள போதும், மேலதிக விபரங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை.

அதேவேளை, ஜனாதிபதியுடன் இந்த விவகாரங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போதே, பிரதமர் ம ஹிந்த ராஜபக்ஷஇ கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கும் பகுதியாகவோ முழுமையாகவோ வழங்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

பொதுவாக, இவ்வாறான விடயங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாசூக்காகத் தான் வெளிப்படுத்துவது வழக்கம்.

ஆனால், அவர் ஜெய்சங்கர் பேச்சுக்களில் பங்கேற்றிருந்த போது இதனை வெளிப்படுத்தியதுஇ உள்நோக்கம் கொண்ட விடயமாகத் தான் பார்க்கப்படுகிறது.

இந்தியா, ஜப்பானுடன் கூட்டாக இந்த கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

பின்னர் அதனை அதானி குழுமம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், இந்த விவகாரத்தை அரசாங்கம் முடக்கி வைத்திருக்கிறது.

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை, ஜனாதிபதி மதிப்பதாக வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் கொலம்பகே அண்மையில் கூட கூறியிருந்தார்.

ஆனாலும். இந்த விவகாரத்தை நிபுணர் குழு அறிக்கை, சட்டமா அதிபரின் பரிந்துரை என்று அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் சில எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. 

இதற்குப் பின்னால் சீனாவின் தூண்டுதல் இருப்பதாகவும், அரசாங்கத்துக்குள் உள்ள சிலரும் அதில் தொடர்புபட்டிருப்பதாகவும் இந்தியாவுக்கு சந்தேகம் உள்ளது.

இந்தியாவோ இந்த திட்டத்தை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கின்ற போதும், உணர்ச்சியைக் கிளறக் கூடிய வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது, கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவை விலக்கி வைத்து விட்டு, இலங்கை அரசாங்கத்தினால் அபிவிருத்திக் செய்யக் கூடிய நிலை இல்லை. 

வேறு நாடு ஒன்றிடம் அதனைக் கொடுக்கக் கூடிய வாய்ப்பும் இல்லை.

இவ்வாறான நிலையில், காலத்தை இழுத்தடிப்பது தான், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தியாக உள்ளது. இதன் மூலம் தேசியவாத சக்திகளின் நம்பிக்கையை தளர விடாமல் கட்டிக் காக்கலாம் என்று அரசாங்கம் நம்புகிறது.

அதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இன்னொரு விவகாரமும் பேச்சுக்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அது மாகாண சபைகள் தொடர்பான விவகாரம். மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ அரசில் செல்வாக்கு செலுத்த முனையும் தேசியவாத சக்திகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், மாகாணசபைகள் ஒழிக்கப்படுவதை இந்தியா தனது கௌரவத்துக்கு இழுக்காகவே பார்க்கிறது. அதனால் தான் விரைவாக தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. 

ஆனாலும் ஆளும்கட்சி கொரோனாவை காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதை பிற்போடுவதாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் இனியும் தீவிரமடையாமல் இருக்க வேண்டுமானால், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. தமிழ்த் தரப்புகளுடனான சந்திப்புகளின் போது 13 ஆவது திருத்தம், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் இதனை பகிரங்கமாக கூறுவதற்கும் இந்தியா தயங்குகிறது. காரணம் தேசியவாத சக்திகள் இந்த தணலை நெருப்பாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகிறது. இன்னொரு பக்கத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்புகளை நடத்திய அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரனையோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையோ சந்திக்கவில்லை.

தமிழர் தரப்பு ஒன்றுபட்டிருக்க வேண்டும், ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என ஆலோசனை கூறியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஏன், தமிழர் தரப்பில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்தார் என்ற கேள்வி உள்ளது. இன்னொரு பக்கத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், வியாழேந்திரனையும் தனித்தனியாகச் சந்தித்திருக்கிறார் ஜெய்சங்கர்.

இவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள், வழக்கத்தில் இவ்வாறான தனித்தனியான சந்திப்புகள் இடம்பெறுவதில்லை. ஜனாதிபதி அல்லது பிரதமருடன் சேர்ந்தே இவர்கள் சந்திப்புகளில் பங்கேற்பார்கள்.

கடற்றொழில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவை, ஜெய்சங்கருடன் மீனவர் விவகாரம் குறித்து தனியாகப் பேச வைத்திருக்கிறது அரசாங்கம். மீனவர் விவகாரத்தில் தீர்வு காண்பது கடினமானது. இந்த விடயத்தில் இரண்டு நாட்டு மீனவர்களும் முட்டிக் கொள்வதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. 

இது இருதரப்பையும், நெருங்கி வராமல் இருப்பதற்கு உதவும் என்று அரசாங்கம் கருதுகிறது. இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை அனுப்பி ஜெய்சங்கருடன் பேச செய்திருப்பதுஇ ‘நல்ல பிள்ளையாக’ தாங்கள் இருந்து கொள்வதற்கான ஒரு உத்தி தான்.

அதேவேளை, வியாழேந்திரனையும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திக்க வைத்திருக்கிறது அரசாங்கம். இந்த இரண்டு சந்திப்புகளும் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவே கூறப்படுகிறது. இதற்குக் காரணம் உள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்க முடியாது என்று கூறிவிட்டது.

தமது தரப்பிலும் சிலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வந்துள்ளனர் என்றும் அவர்களின் ஊடாகவே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்போம் என்றும் ஏற்கனவே அரசாங்கம் கூறியிருக்கிறது.

இவ்வாறான நிலையில் தான், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரனையும்,   தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என இந்தியாவை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, வடக்கு -கிழக்கில் அரச ஆதரவு சக்திகளின் கரங்கள் ஓங்குவதை இந்தியா விரும்பவில்லை என்ற கருத்தை ஜெய்சங்கர் வெளிப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறான நிலையில், டக்ளஸ் தேவானந்தா மற்றும் வியாழேந்திரனை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது நிகழ்ச்சி நிரலுக்கமைய சந்தித்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், அரசாங்கம் இவர்களைக் கொண்டு இந்தியாவுக்கு பொறிகளை வைக்க முனைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பயணத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் பலதரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதும்இ அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும்இ கவனிக்கத்தக்க விடயங்களாக உள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணத்துக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் அவசரமாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்த விவகாரமும், இந்திய தரப்பை உசார்படுத்தியிருக்கிறது.

சற்று அயர்ந்து போனாலும், இந்தியாவின் கைகளில் இருந்து நழுவிவிடக் கூடிய நிலையை புதுடெல்லி புரிந்து வைத்துள்ளது. 

இவ்வாறான நிலையில், ஜெய்சங்கரின் பயணம், மாற்று நகர்வுகளுக்கான திறவுகோலாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.