- லோகன் பரமசாமி -
இலங்கையின் வெளியுறவுத்துறையும் அது சார்ந்த அமைப்புகளும் அண்மை காலங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கொள்கை ஆய்வாளர்களையும் சந்திக்கும் வெளியுறவு அதிகாரிகள் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதை கூறுவதற்கு தவறுவதில்லை. 

குறிப்பாக அதிகார பரவலாக்கம் குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கும் பொழுது இலங்கை ஒரு சிறிய தேசம் இந்தச் சிறியதேசத்தில் ஒன்பது அதிகார சபைகளை அமைப்பதுவும் ஒன்பது பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவதுவும்  ஒன்பது காணி அதிகார சபைகளை உருவாக்குவதுவும் மிகவும் கடினம், செலவும் அதிகம் என்று குறிப்பிடுகின்றனர். 

இந்தக் கருத்துக்களின் பின்னணியில் தமிழ் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க முடியாது என்ற விடயமே உள்ளடங்கி உள்ளது. அதேவேளை இந்திய தென்பிராந்திய பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் தாம் கவனம் கொண்டுள்ளதாகவே பரப்புரை செய்து வருகின்றனர்.  

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டது. என்றும் வெளிவிவகார கொள்கைகளும் சர்வதேச வியாபார உடன் படிக்கைகளும் அவற்றின் செயற்பாடுகளும்  இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக இலங்கையிலிருந்து எந்த அச்சுறுதலையும் ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்றும் தொடர்ச்சியாக கூறியும் வருகின்றனர்.

இலங்கையில் வெளிநாடுகளின் தலையீடுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறிவருகிறது அரசாங்கம். அதேநேரம், தொடர்ச்சியான பல்வேறு வகையறைக்குள் கடன்களை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. 

இதன் முலம் இலங்கை அபிவிருத்தி என்ற பெயரில் தனது ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் சீனாவிடம் கையளிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலை நாடுகளிடம் இருந்து பாதுகாத்துவரும் தனது இறையாண்மையை சீனாவிடம் பறிகொடுத்து நிற்கும் நிலையொன்று இலங்கைக்கு ஏற்படும் ஆபத்துக்கள் இல்லாமில்லை. அடுத்த ஐந்து வருடங்கள் நிலைமை இவ்வாறு தான் இருக்கப்போகின்றது என்பது பலருடைய கணிப்பாக உள்ளது.

ஆயுத விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இதுவரை காலமும் இலங்கையை அதன் போக்கிலேயே அரசியல், இராஜதந்திர விட்டு கொடுப்புகள் மூலம் கையாண்டு வந்திருக்கும் இந்தியாவுக்கு அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது. 

இலங்கையின் அரசியல் சட்டவாக்க பலமும், பொருளாதார பலமும் சீனாவின் கைகளில் சென்றதன் பின்பு எடுக்க கூடிய நடவடிக்கைகள் மிகவும் கடினமாக பாதைகளை கொண்டதாக அமைந்திருக்கும். ஆனால் இதற்கு தேவையான  தருணமொன்று தற்போது அமைந்திருக்கிறது. 

இந்தியாவின் மத்திய அரசில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் தமிழ் நாட்டு சட்ட மன்றத்தில் ஆசனமொன்றைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது.

விரைவில் இடம் பெற இருக்கும் தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் கள நகர்வுகளில் பாரதீய ஜனதா கட்சி பல சூழ்ச்சித்திறங்களை பயன்படுத்தி சில சட்ட மன்ற தேர்தல் தொகுதிகளிளாயினும் ஆசனங்களைக் பெற வேண்டும் என்று முயற்சிகளை எடுக்கின்றது. 

அதற்கான ஆயுதமொன்றாக நம்பிக்கை வைத்திருந்த ரஜினிகாந்தும் கைவிட்ட நிலையில் மீண்டும் திராவிடக் கட்சிகளிடையே தான் மோதல்கள் நடைபெறும் களநிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் வகையிலாக இருக்க கூடிய  ஒரே ஆயுதம் இலங்கைத்தமிழர் விவகாரமாகும். 

அதிலும், தமிழக மக்கள் மனங்களில் ஆழ்ந்து உறைந்து போய் கிடக்கும் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை,  தமிழரின் தாயக கோட்பாட்டினை அங்கீகரித்தல் ஆகியன தமிழகத்தில் மக்களில் தாக்கம் விளைவிக்க கூடிய விடயங்களாக உள்ளன.

அதாவது  திராவிட கட்சிகளால் இந்த தேர்தலில் கைவிடப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதன் மூலமே குறிப்பாக திராவிட கட்சி களுக்கும், தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் நாட்டு தேர்தல் களத்தில்  சாவல்களை ஏற்படுத்த முடியும். 

வெறுமனே மனித உரிமை பேரவையில் அழுத்தம் கொண்டு வருதல், அல்லது மேலைதேய நாடுகள் கொண்டுவரும் இலங்கைக்கு எதிரான சற்று கனதியான  தீர்மானங்களில் இந்தியா விலகி இருத்தல் போன்ற இந்தியாவின் தொடர்ச்சியான போக்காகவே இருக்குமா? இது பிராந்திய தலைமைத்தவத்தின் செயற்பாடாக நீடிக்குமா என்பது இங்குள்ள கேள்வியாகிறது. 

தமிழ் நாட்டு ஆய்வாளர்கள் சிலரின் பார்வையில், “பா.ஜ.க. சித்தாந்த அடிப்படையில் இலங்கைத்தமிழர் குறித்த எந்த சிந்தனையும் கொண்டதாக தெரியவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்தம்  அளவுக்கு மத்திய அரசு துணிவுடன்  செயற்பட வலுவற்றது. இந்திய ஆளும் மேலாதிக்க சிந்தனை, அடிப்படை ஆரிய, இந்துவாத சிந்தனை, இதற்கு ஒருபோதும் இடமளிக்காது” என்று கூறுகின்றார்கள். 

இதேநேரம், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட, பாத் ஃபைன்டர்  எனப்படும் சிந்தனைக்கு குழு நிறுவனமொன்றை வைத்திருக்கின்றார். இது கொழும்பிலும் டெல்லியிலும் செயலாற்றுகின்றது. இந்தக்குழுவானது, மேலைதேய நாடுகளையும் இந்தியவையும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுகள், செயற்படுகளிலிருந்து தடுப்பதை இலக்காக கொண்டிருக்கின்றது.

உள்நாட்டில் சில பொருளாதார நடவடிக்கைகளை முன் நகர்த்துவதிலும்  வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம் கொழும்பு, திருகோணமலை பொருளாதாரப் பதை திட்டமாகும். 

கொழும்பு, திருகோணமலை பொருளாதார பாதைத்திட்டத்திற்கு அமைய திருகோணமலை துறைமுகத்தையொரு ‘உலர் துறைமுகமாக’ மாற்றும் திட்டமாகும். மேலை நாடுகளால் தெற்கில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் கைவிடப்பட்ட நிலையில் இந்திய, யப்பானிய உதவியின் மூலம் இந்திய தேசிய பாதுகாப்பக்கு குந்தகம் விளைவிக்காத வகையிர் இந்த துறைமுகத்தை நவீன மயப்படுத்தும் சில அறிக்கைகள் வெளியிடப்பட்டன. 

இந்த திட்டத்தினை பிம்ஸ்டெக் (டீஐஆளுவுநுஊ) அமைப்பும்  பரிந்துரை செய்துள்ளது. இதன் பலனாக திருகோணமலை துறைமுகம் யப்பானிய முன் முயற்சியுடன் மேலைதேய நாடுகளின் அதிகரித்த பாவனைக்கு வரும் நிலை ஏற்படுமாயின் அதற்கான ‘பண்ட பரிமாற்ற கைதொழில்’ நடவடிக்கைகளை கொழும்பை அண்டிய கம்பஹா, களுத்துறை போன்ற இடங்களுக்கும், மேலும் தம்புள்ளை குருநாகல் போன்ற  பகுதிகளை தொழிற்பேட்டைகளாக மாற்றும் பெரும் திட்டமாக இத்திட்டம் அமையவுள்ளது. 

இத்தகைய திட்டம் ஏற்கனவே கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வரலாற்று புகழ் பெற்ற பிரதான துறைமுகமான மொம்பாசா துறைமுகம்  தற்போது ‘உலர் துறைமுகமாகவே மாற்றப்பட்டுள்ளது. மொம்பாசா துறைமுகத்தில் வந்து இறங்கும் அனைத்து கொள்கலன்களும் அங்கிருந்து நேரடியாக கென்யாவின் தலை நகரான நைரோபியை அண்மித்துள்ள நைவஷாவுக்கு பாரவண்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு பண்ட பரிமாற்ற கைதொழில்கள் இடம் பெறுகிண்றன. 

நைரோபி அரசாங்கத்தின் இந்த செயற் திட்டத்தின் காரணமாக மொம்பாசாவும் அதனை அண்டிய நகர மக்களும் வேலை வாய்ப்பின்மையால் பெரும் இடர்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அதனால் பாரிய போராட்டங்கள் நடை பெற்று வருகிறன. இதேபோல இலங்கை அரசாங்கமும் திருகோணமலை பகுதியையும் அதனை அண்டிய பகுதிகளையும் வெற்றுப்பிரதேசமாக  உருவாக்கும் திட்டமாகவே கொழும்பு திருகோணமலை பொருளாதார பாதைத் திட்டத்தை வரைந்து உள்ளது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் சிங்கப்பூர் பல்கலைகழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டஇணையவளி மாநாட்டில்  இந்திய சர்வதேச அரசியல் புலமையாளர் ராஜாமோகன் இலங்கை வெளியுறவுச் செயலர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் அதிக இடம் இருக்கிறது அங்கே பண்ட பரிவர்த்தனை தொழிற் பேட்டையை ஏன் ஆரம்பிக்க கூடாது என்று கேட்டபோது கொலம்பகே “திருகோணமலை மிக அழகான இடம் அதனை நாம் சேதப்படுத்த விரும்பவில்லை” என்பதாகும்.

ஏற்கனவே சிங்கள குடியேற்றங்கள் மூலம் திருகோணமலையையும் அதனை அண்டிய கிராமங்களையும் அரசியல், சமூக பொறிமுறைகள் மூலம்  அரச உதவியுடன் பெரும்பான்மையினத்தவர்கள் கைப்பற்றி வருகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் இலங்கையின் கிழக்கு கடற்கரை ஓரமாக உள்ள பிராந்தியங்கள்  தெற்காசிய பிராந்தியத்தில் வறுமை மிக்க பிரதேசங்களாக கணித்துள்ளன.

ஆக சிங்கள குடியேற்றங்கள் தாராளமாக இடம்பெற்று,  முற்று முழுதாக சிங்கள பெரும்பாண்மையைக் கொண்ட கிழக்கு பிராந்தியம் உருவாகும் வரை இப்பிராந்தியத்தை வரண்ட பிரதேசமாக வைத்திருக்கவே சிங்கள தேசிய சிந்தனை ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.