(செ.தேன்மொழி)

களுத்துறை – மத்துகம பகுதியில் 700 போதை வில்லைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடதொல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 100 போதை வில்லைகளை கைப்பற்றியுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், அவரிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைக்கமைய களுத்துறை  - ரஜவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 போதை வில்லைகளை மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.