(செ.தேன்மொழி)
மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக கடந்த ஏழு நாட்களுக்குள் 2,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 46 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல்மாகாணத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 2,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் , அவர்கள் அனைவரும் அன்டிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.’

இதன்போது 1,313 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 19 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய 1,021 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் 27 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 46 பேருக்கு இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது மேல்மாகாணத்தில் காணப்படும் மீன் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் நேற்று முன்தினமும் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் , எவருக்குமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை , மேல்மாகாணத்தை  தவிர , நாட்டின் ஏனையப்பகுதிகளிலும் முக்கவசம் அணியாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் , இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாளயத்திற்குள் 23 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள், காரியாலயங்கள் உள்ளிட்ட தொழில் நிலையங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைய இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் சுற்றுச் சூழல் பிரிவினரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு புறம்பாக செய்றபடும் தொழில் நிலையங்கள் அனைத்துக்கும் எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.