மியான்மார் பொறிமுறையும் சவால்களும்

By J.G.Stephan

11 Jan, 2021 | 05:45 PM
image

-கார்வண்ணன் -

“மியான்மாருக்கான விசாரணைப் பொறிமுறைகளை அமைத்தாலும், அது உள்ளே களமிறங்கி சான்றுகளைத் தேடவோ, சாட்சியங்களைப் பெறவோ, கைது செய்யவோ முடியாது”

மியான்மாரில் 2016 தொடக்கம், 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறுபான்மை ரோஹிங்கியா இன மக்களின் மீது, கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை கடந்த தசாப்தத்தில் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் போது, 24 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர். 18 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையாக இருந்த போதும், இந்த விவகாரத்தில் சர்வதேச அக்கறை கூடுதலாக இருந்தது.

மியான்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று கூறப்படுகின்ற போதும், சர்வதேச அளவில் அது இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில், 2018ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்,  நிறைவேற்றப்பட்ட 39/2 தீர்மானத்துக்கு அமைய, மியான்மாருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறை (Independent Investigative Mechanism for Myanmar) உருவாக்கப்பட்டது.

இது சுருக்கமாக IIMM என அழைக்கப்படுகிறது. சிரியாவுக்கான IIIMM பொறிமுறையின் பிரதி தான் இது. 

சிரியாவுக்கான பொறிமுறையை உருவாக்கியது ஐ.நா. பொதுச்சபை, மியான்மாருக்கான பொறிமுறையை உருவாக்கியிருப்பது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை. “2011 ஆம் ஆண்டு தொடக்கம் மியான்மரில் நடந்த மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்காகவே, இந்த சுயாதீனமான பொறிமுறை நிறுவப்பட்டது.

சிரியாவிலும் இதே நோக்கிலான பொறிமுறையே உருவாக்கப்பட்டது என்பதை, கடந்தவாரப் பத்தியில் பார்த்திருந்தோம். எதிர்காலத்தில் இந்த குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட, தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில், நியாயமான மற்றும் சுயாதீனமான குற்றவியல் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், துரிதப்படுத்துவதற்கும் தேவையான,-சர்வதேச சட்டத் தரங்களுக்கு அமைவான,  கோப்புகளைத் தயாரிப்பதே இந்தப் பொறிமுறையின் பிரதான பணியாகும்.

இந்த பொறிமுறையின் ஊடாக, திரட்டப்படும் தகவல்கள் நம்பகமான விசாரணை நீதிமன்றங்களில் மாத்திரம், பகிரப்படும் என்றும், சாட்சிகளைப் பாதுகாக்கும் வகையில் சான்றுகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்படுகிறது.

இந்த விசாரணைப் பொறிமுறையின் தலைவராக 2019 ஜூலை தொடக்கம் பணிகளை ஆரம்பித்திருந்தார் அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கொலஸ் கும்ஜியான். இவர் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சட்டவாளர். 20 ஆண்டுகள் சர்வதேச குற்றவியல் நீதி செயற்பாடுகளில் தொடர்புபட்டிருந்தவர்.

கம்போடியா, கிழக்கு திமோர், யூகோஸ்லாவியா, பொஸ்னியா, ஐவரிகோஸ்ட் போன்ற நாடுகளில் இடம்பெற்ற மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட சர்வதேச தீர்ப்பாயங்கள், விசேட நீதிமன்றங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர்.

மியான்மாருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் துணைத் தலைவராக ஜப்பானைச் சேர்ந்த காரு ஒகுய்சுமி என்ற பெண் சட்டவாளர் பணியாற்றுகிறார். இவரும் ஐ.நா.வின் பல்வேறு நீதி செயற்பாடுகளில் அனுபவம் பெற்றவர்.

யூகோஸ்லாவியா, பொஸ்னியா, சியராலியோன், லெபனான், போன்ற பல நாடுகள் தொடர்பான தீர்ப்பாயங்களிலும் இடம்பெற்றிருந்தவர். இந்தப் பொறிமுறையின் செயற்பாடுகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக குறிப்பிடும் இதன் தலைவரான நிக்கொலஸ் கும்ஜியான்,அங்குள்ள சவால்கள் குறித்து பின்வருமாறு விபரிக்கிறார்.

“மனித உரிமைகள் பேரவை வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதில் பலத்த சவால்கள் உள்ளன. சர்வதேச குற்றங்களைக் கையாளும் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் பெறப்பட்ட அனுபவங்களும், அவற்றுடன் ஒப்பிடக்கூடிய ஏனைய சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளும், இதுபோன்ற விசாரணைகள் சிக்கலானவை என்பதை காட்டுகின்றன.

அத்துடன்,  தகவல்கள், ஆவணங்கள் மற்றும் சான்றுகள் தயாராக உள்ள வலுவான வழக்குகளை, கோப்புகளாக வடிவமைக்க காலம் எடுக்கக் கூடும் என்பதையும் அது காட்டுகிறது. குற்றங்களைப் பற்றிய அறிந்த சாட்சியங்களைக் கண்டறிந்து, அதனைப் பெறுவதற்கு கடினமான முயற்சிகள் தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விசாரணைப் பொறிமுறையும் கூட ஒரு நீதிமன்றம் அல்ல. இந்த விசாரணைப் பொறிமுறையினால், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவோ, வழக்குத் தொடரவோ அல்லது சோதனைகளை நடத்தவோ முடியாது. குற்றங்கள் தொடர்பான, ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாப்பது, மற்றும் தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச நீதிமன்றங்களுக்கான வழக்கு கோப்புகளைத் தயாரிப்பது, சாட்சிகளையும் தகவல் ஆதாரங்களையும் பாதுகாப்பது மட்டும் தான் இதன் பொறுப்பு.

அதனை விட, இந்த விசாரணைப் பொறிமுறை மியான்மார் அரசைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்படவும் இல்லை. ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவுமே எந்தவொரு நாட்டையும் கட்டுப்படுத்தக் கூடியவையல்ல.  அத்துடன் பேரவையின் தீர்மானத்தினால் உருவாக்கப்படும் பொறிமுறைகளுடன், இணங்கிப் போக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

சம்பந்தப்பட்ட நாடு, விரும்பினால் இணங்கலாம். விரும்பாவிட்டால், விலகியிருக்கலாம். மியான்மாருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையும் கூட, மியான்மார் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  அதனால் ஜெனிவாவில் இருந்தே இந்த பொறிமுறை இயங்குகிறது. இந்த விசாரணைப் பொறிமுறையினால், நேரடியாக சாட்சியங்களை பெறுவதிலும், ஆதாரங்களைத் திரட்டுவதிலும் சிக்கல்கள் உள்ளன. 

மியான்மாரில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் உதவியைப் பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், அது பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. அதேவேளை, மியான்மாரில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கும், ஆதாரங்களை சேகரிப்பதற்கும் உள்ள ஒரே வழி, இனப்படுகொலையில் இருந்து தப்பி, பங்களாதேஷ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்ற றொகிங்யா அகதிகள் தான்.

அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்கள், ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான், இந்த விசாரணைப் பொறிமுறையினால், கோப்புக்களைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தான், பொறிமுறையின் தலைவர் இது மிகவும் சவாலான வேலை என்றும், நீண்டகாலம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சிரியா, மியான்மார் போன்ற விசாரணைப் பொறிமுறைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து அண்மையில் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், ஒரு மெய்நிகர்  கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதில், மியான்மருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் தலைவர், சிரியாவுக்கான பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறையின் தலைவர், ஐ.நா.வின் பொறுப்புக்கூறல் குழுவின் சார்பில், போர்க்குற்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஸ்டீபன் ராப் உள்ளிட்டவர்கள், தற்போதைய நிலையில், பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதித்திருந்தனர்.

அப்போது, மியான்மாருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் தலைவரான நிக்கொலஸ் கும்ஜியான், தாம் எதிர்கொள்ளும் சில சவால்களைக் குறித்து விபரித்திருந்தார். “இந்தப் பொறிமுறை ஒரு நீதிமன்றமோ அல்லது நீதிமன்றம் ஒன்றுடன் தொடர்புடையதோ அல்ல, இங்கு நீதிபதிகளும் இல்லை.

அவ்வாறு நீதிபதிகள் இருந்தால், அவர்களிடமிருந்து உத்தரவுகளை கோரலாம் அல்லது தகவல்களைப் பெறக் கூடிய சாத்தியமுள்ளவர்களிடம் ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தலாம். இந்த அதிகாரம் எதுவும் பொறிமுறைக்கு கிடையாது.

மியான்மாரின், தேசிய சட்டங்கள் மற்றும் தனியுரிமை தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதால், ஐ.நா. பொறிமுறையானது, அரசாங்க அதிகாரிகளின் ஊடாகவே செல்ல வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது இலங்கை விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பில் உள்ள இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தை, அங்கிருந்து வெளியே கொண்டு செல்லக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, கஜேந்திரகுமார் ஜெனிவாவுக்கு அப்பால் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இலங்கை அரசாங்கமோ ஐ.நா.வில் எந்த சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்கிறது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் தமக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும் கூறியிருக்கிறது. வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட இரண்டு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருந்தால், ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு இதனைக் கொண்டு செல்வதில் அர்த்தமில்லை.

ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் சரி, அங்கு இலங்கையைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. இந்த நிலையில், மீண்டும் ஜெனிவா மேற்பார்வையைத் தொடர்வது தான் சாத்தியப்படக் கூடிய வழிமுறையாகத் தென்படுகிறது. அங்கு மியான்மார் தொடர்பாக உருவாக்கிய பொறிமுறையைப் போன்றதொரு பொறிமுறையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு உடனடி நீதி வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு முதலில், ஆதாரங்களும், தரவுகளும், தகவல்களும் திரட்டப்பட வேண்டும். அதனை இதுவரை செய்யக் கூடிய நிலை இருக்கவில்லை. ஐ.நா. பொறிமுறையின் மூலம் அவ்வாறு ஆதாரங்களையும் சான்றுகளையும் திரட்டித் தொகுத்துப் பாதுகாக்கின்ற ஒரு வழிமுறையை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் அது நம்பகமானதாக, சட்டரீதியானதாக ஏற்றுக் கொள்ளப்படும். அவ்வாறான ஒரு சுயாதீன விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் இலக்கை நோக்கி ஜெனிவா கூட்டத்தொடர் நகரக் கூடும். ஆனாலும், மியான்மார் பொறிமுறையின் தலைவர் கூறியதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டும். இது இலகுவான பணியோ, விரைவாக நடந்து விடக்கூடியதோ அல்ல. அதற்குக் காலம் தேவைப்படும். அதைவிட, என்னதான் விசாரணைப் பொறிமுறைகளை அமைத்தாலும், உள்ளே களமிறங்கி சான்றுகளைத் தேடவோ, சாட்சியங்களைப் பெறவோ, கைது செய்யவோ முடியாது.

அதற்கு மீண்டும் இலங்கை அரசு மூலமாகத் தான் அணுக வேண்டும்.இந்தப் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடும். ஏனென்றால், அவர்கள் விரைவான நீதியை ஐ.நாவின் ஊடாக எதிர்பார்க்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right